Monday, August 26

'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய்த சாமியார்..!

' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் '

சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது..,

ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க,

அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..!


ராம்பாவ் சுவாமிகள்

தஞ்சாவூரச் சேர்ந்தவரு..,

இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..!

நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு..,

அந்த யாகத்துல போட   50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200 கிலோ அருகம்புல், 400 வரட்டி, 4000 கொழுக்கட்டைன்னு எக்கச்சக்கமான பொருட்கள தயார் பண்ணி வச்சிருப்பாங்க..,


' யாகம் வளர்க்கும் ராம்பாவ் சுவாமிகள் '

இந்த யாகசாலையில நல்லா தீ வளர்த்து, அதுல எல்லா பொருளையும் அக்னிக்கு அர்ப்பணம் செஞ்சிட்டு, கடைசியா, தானும் அந்த தீயில படுத்துக்குவாரு…,

ஆனா, திகுதிகுன்னு, எரியற தீ ஜீவாலை இவரமட்டும் எதுவுமே செய்யாது.
இதகேள்விப்பட்டு, வெளிநாட்டுல இருந்து ஒரு டீம் வந்து, இது எல்லாத்தயும் ஷூட் பண்ணாங்க..,(இது 2002ல..அப்பவே சாமியாருக்கு வயசு 63..)

ராம்பாவ் சுவாமிகள் தன்னோட உடம்புல ஒரு சாதாரண ஷால் மட்டும்தான் சுத்திட்டு தீயில இறங்குவாரு..அந்த ஷால்ல எதேனும் ஸ்பெஷல் தீப்பிடிக்காத பொருள் கலந்திருக்குமான்னு கூட வெளிநாட்டு லேபுக்கே அனுப்பி டெஸ்ட் செஞ்சு பாத்தாங்க..,

ஆனா, அது சாதாரண ஷால்தான்னு ரிப்போர்ட் வந்திருச்சு..,

ராம்பாவ் சுவாமிகள், தீயில   இப்படி இறங்குறத, இதுவரைக்கும் கடந்த 45 வருஷத்துல ஒரு ஆயிரம் முறை செஞ்சிருப்பாராம்..அவரது உடம்புல ஒரு சின்ன தீக்காயம் கூட ஏற்பட்டதில்ல..

அதுமட்டுமில்லாம, 28 வருஷமா, தினமும் ரெண்டு வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் மட்டும்தான் இவரோட உணவு, தண்ணியும் சிலதுளி மட்டும்தான்..,(பூஜையின்போது, உள்ளங்கையில விட்டு தீர்த்தம் அருந்துவது மட்டும்தான்)

தினசரி இவரு தூங்கறதும் 3 மணிநேரம் மட்டும்தானாம்..,

எப்படி இதெல்லாம் சாத்தியம்னு, எல்லாவிதமான மருத்துவ பரிசோதனையும் நடத்திபாத்தாங்க…,

கடைசியா, இதுக்கெல்லாம் காரணம் ராம்பாவ் சுவாமிகளோட யோகசக்திதான்னு இப்ப நிரூபிக்கப்பட்டிருக்கு..,

ராம்பாவ் சுவாமிகள் பத்தி வெளிநாட்டினர் நடத்துன அந்த ஆய்வு பத்தி விரிவா ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து அதுல தங்களோட ஆச்சரியங்கள பதிவு பண்ணியிருக்காங்க.., (The Fire Yogi)

"...ஒரு குறிப்பிட்ட மந்திரத்த ஜெபிக்கும்போது, நானே, அந்த அக்னியாக மாறிடறதால, எனக்கு தீயால பாதிப்பு ஏற்படறதில்ல..." ன்னு ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

யோகத்தின் மூலமா நம்ம உடம்புல  பிராணசக்திய அதிகரிக்கச் செய்யறது மூலமா, இப்படி பல அதிசயங்கள செய்யமுடியும்னும் ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

தீ ஜீவாலைக்குள்ள  படுத்தும்  ராம்பாவ் சுவாமிகள, தீ எதுவுமே செய்யல..அப்படிங்கறத மட்டுமே, ஒரு ஆச்சரியமான நிகழ்வா, இங்க பதிவு செய்யவரல...,

பிரணவசக்தி மூலமா, இதவிட உச்சத்த ஒவ்வொரு மனிதனும் பெறமுடியும்ங்கறதுக்கான ஒரு உதாரணம்தான் இந்தப்பதிவு.

பொதுவா, மிகப்பெரிய ஞானிகள், இந்த மாதிரியான அற்புதங்கள் நிகழ்த்தறத விரும்பமாட்டாங்க, ஏன்னா, மேஜிக் மாதிரியான அற்புதங்கள சில பயிற்சிகள் மூலமா யோகபயிற்சியில இருக்குற யாராலயும் செய்யமுடியும், 

ஆனா, அடுத்தவங்கள பிரமிக்க வைக்கற, இதுமாதிரியான செயல்களால, முக்கியமான இலக்கான, ஞானத்தை அடைதல் அப்படிங்கறதுல இருந்து யோகபயிற்சியாளனோட கவனம் சிதறடிக்கப்படும்..,

அதனாலதான், ஞானமடைஞ்ச மகான்கள், இதுமாதிரியான, சின்ன, சின்ன அற்புதங்கள் செய்யுற ஆற்றல ஒரு யோகபயிற்சியாளன், கடந்து வரணும்னு வலியுறுத்துவாங்க..,

ஞானத்தின் பாதையில,வழிநெடுக, எத்தனையோ ஆச்சரியங்களும், அதிசயங்களும்,  காத்திருக்கு..,

ஒரு நீண்ட பயணத்துல வழியிலயே வேடிக்கை பாத்துட்டு நின்னுட்டோம்னா, போய்சேர வேண்டிய இடத்துக்கு போகமுடியாதுன்னு, உணர்த்தறதுக்காகத்தான் இந்தப்பதிவு..!

டெயில்பீஸ்;

ராம்பாவ் சுவாமிகளுக்கு, இப்போ வயசு 78.., இதோ இப்ப தான் சிங்கப்பூர்ல இந்த ஸ்பெஷல் யாகத்த முடிச்சிட்டு ஊர் திரும்பி இருக்காரு. இன்னும் ஒரு மாசம் மட்டும்தான் தஞ்சாவூர்ல இருப்பாராம். திரும்பவும் விநாயகர் சதுர்த்தி முடிஞ்சதும், வட இந்தியா பயணம் செய்யப்போறாராம்.

இவர் இந்த யாகம் செஞ்சா, அந்த இடத்துல மழை வரும்...அதுமட்டுமில்லாம, பலவிதமான மூலிகைகள போட்டு பலமணிநேரம் இந்த யாகம் நடத்தறதால, உடல்நல பிரச்னைகள், நோய் போன்றதற்கும் இது கண்கண்ட தீர்வாக இருப்பதா பலரும் உணர்ந்திருக்காங்க.., 

14 மணிநேரம் தொடர்ந்து செய்யப்படுகிற யாகம் இதுன்றதால, இதுக்கு அதிகமா செலவு ஆகுமாம்...அப்படியும் இந்த விநாயகர் ஹோமத்த செய்யணும்னு விரும்பறவங்களுக்குதான் இப்போ ராம்பாவ் சுவாமிகள் இத செய்து கொடுத்திட்டு இருக்காரு..,


Sunday, August 25

அனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..!

தீர்த்தமலை

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..!

பலமுறை இங்க போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு..இப்பவும் கொஞ்சநாளா  இங்க போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஏக்கம்..இந்த சமயத்துலதான், தீர்த்தமலையப் பத்தி தினந்தந்தியில அழகான ஒரு கட்டுரைய எழுதியிருக்காங்க..,

தினந்தந்தியில் வெளியான கட்டுரை

ஏறக்குறைய எனக்கு திரும்பவும் தீர்த்தமலைய நேர்ல பார்த்தமாதிரியே ஒரு உணர்வு..,

சாதாரணமா, குடிக்கிற தண்ணியவே, வெள்ளி டம்ளர்ல குடிச்சா ஒரு பலன், மண்பாத்திரத்துல வச்சு குடிச்சா ஒரு பலன், சில்வர்ல குடிச்சா ஒரு பலன்னு சொல்ல நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்...

அப்படிதாங்க..தீர்த்தம்னு சொல்றதுக்கும்..கண்டிப்பா சில விசேஷ குணங்கள் இருக்கத்தான் செய்யுது..,

இடம்,பொருள்னு சொல்றமாதிரி, தீர்த்தம்னு சொன்னா, அந்த இடத்துக்கு நிச்சயமா ஒரு தனித்தன்மை இருக்கும்..,

ஒரு குறிப்பிட்ட இடம், அந்த இடத்துல உருவாகிற ஊற்று, இதபொறுத்துதான் அதோட மகத்துவம் கூடுது. தீர்த்தமா சக்தியடையுது.

தீர்த்தங்களோட முழுபலனும் நமக்கு கிடைக்க, ஒவ்வொரு தீர்த்தத்துல குளிக்கறதுக்கும், ஸ்பெஷலான ஒரு டைம் இருக்கு..,

இன்னொரு முக்கியமான விஷயம்,

தேவர்கள்...ரிஷிகள்தான் தீர்த்தரூபத்துல இருக்காங்க..., அதனால..அவங்களோட அனுமதியில்லாம..நாம அந்த இடத்துக்கு போகவே முடியாது.

அதனால, தீர்த்தம் அப்படின்னு சொன்னால, மிகப்பெரிய சக்தி மையத்த நாம அணுகறோம்னு ஒரு உணர்வு நமக்கு இருக்கனும்.., தீர்த்தங்கள பொறுத்தவரைக்கும் ஏராளமான சூட்சுமங்கள் இருக்குங்க..,

ஆனா, அதையெல்லாம் சாதாரண ஜனங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.. இல்லன்னா, அதையெல்லாம் தெரிஞ்சிகிட்டா, சிலர் அதை தவறா பயன்படுத்திக்குவாங்கன்னுதான்,  பல விஷயங்கள் இன்னுமும் சூட்சுமமாவே இருந்திட்டிருக்கு..

சாதாரணமா, நாம வீட்டுல குளிச்சாலே, உடம்புல இருந்து கண்ணுக்குத் தெரிஞ்ச சில அழுக்குகள் விலகுறமாதிரி, தீர்த்தங்கள்ல குளிக்கறதால, நமக்குள்ள நமக்கு தொந்தரவு கொடுத்திட்டு இருக்கற ஏதோ ஒண்ணு நிச்சயமா விலகுது...அதுக்கு பாவம்..தோஷம்னு எல்லாம் பேர் கொடுக்கத்தேவையில்ல..,

தீர்த்தமலையில  மெயின் தீர்த்தம் ராமர் தீர்த்தம்..!

சின்னபையனா இருந்தப்பவே என்ன இங்க அழைச்சிட்டு போயிருக்காங்க..,(என்னோட பெரியப்பா தன்னோட தோள் மேல என்னை உக்காரவச்சிட்டு மலையேறுன அந்த அனுபவம்..எனக்கு ரொம்பவே புதுசு)

எக்கச்சக்கமான குரங்குகள் இங்க சுத்திட்டு இருக்கும்..அதனாலயே, மலை ஏறத்தொடங்கறதுக்கு முன்னாலயே, மலையடிவாரத்துல, குரங்குக்கு போட பொரி, பழம்னு எதாவது வாங்கிட்டுதான் நிறையபேர் மலை ஏறுவாங்க ...,

அதேமாதிரி, இந்த மெயின் தீர்த்தத்துல(ராமர் தீர்த்தம்) எப்பவுமே தண்ணி வந்தபடியேதாங்க இருக்கும். மழைக்காலமா இருந்தா கொஞ்சம் அதிகமா வரும்..

மத்த நாட்கள்ல மலைஉச்சியில சின்னதா ஒரு பைப் பொருத்தியிருப்பாங்க..அந்த பைப் வழியா மெல்லிசா, தண்ணி கொட்டிகிட்டே இருக்கும்..


(இந்தபடத்துல ஒரு வட்டம் போட்டு காட்டியிருக்கிற இடத்துல, அந்த சின்னகோபுரத்துக்கு நடுவுலதான் அந்த பைப் இருக்கு..)

இதுலதான்..சிலசமயம் ஒரு ஆச்சரியம் நடக்கும்...இந்த தீர்த்தத்துல சிலருக்குமட்டும் குளிக்க போய் நிக்கும்போது, தண்ணியே வராது..என்னன்னு மேல பாத்தா, சில குரங்குகள்(அனுமன்..?) வந்து அந்த பைப்ப கை வச்சு அடிச்சிட்டிருக்கும்..,

இவங்க...கீழே இருந்து பதறுவாங்க..நாம ஏதோ செய்யக்கூடாத தப்பு செஞ்சிருக்கோம்..அதான் ஆஞ்சநேயரு வந்து தீர்த்தம் கிடைக்காம செய்யறாருன்னு சொல்லிட்டு அவரபாத்து,
 "..ஆஞ்சநேயா ..ஆஞ்சநேயா.." ன்னு புலம்புவாங்க.


ஆனா, அந்த குரங்குகள் தீர்த்த பைப்ல இருந்து கைய எடுக்கவே எடுக்காது.அதுமட்டுமில்லாம, அவங்களப்பாத்து பயங்கரமா முகத்த வச்சிகிட்டு உறுமவும் செய்யும்..(இதோ மேல படத்துல இருக்கே அதுமாதிரி..)

இத டெஸ்ட் பண்றதுக்காகவே,  அங்க குளிக்க நின்னுட்டு இருக்கற, மத்தவங்க நகர்ந்து வந்து அந்த தீர்த்தம் விழுற இடத்துல வந்து நிப்பாங்க..இப்ப அந்த குரங்கு கைய எடுத்துடும்..திரும்பவும், தீர்த்தம் கீழே விழும்..மத்தவங்க எல்லாம் குளிக்கலாம்..,

ஆனா, திரும்பவும், அந்த பழைய நபர், தானும் இப்ப தீர்த்தத்துல குளிச்சிடலாம்னு கூட்டத்துல இருந்து நகர்ந்து வந்தார்னா, திரும்பவம், குரங்கு பைப்பை மூடிரும்..

இந்த கூத்து இப்படியேதான் நடந்திட்டு இருக்கும்.

சம்மந்தப்பட்ட நபர், அங்கிருந்து கோயிலுக்குப்போய் மனதார தான் எதோ தப்பு பண்ணியிருக்கேன்..அத மன்னிச்சிருன்னு வேண்டிகிட்டு திரும்பவும் வந்தா, சில சமயங்கள்ல தீர்த்தம் கிடைக்கும்..சிலருக்கு அதுவும் கிடைக்காது..,

இந்த காட்சிய நானும் நேர்ல பாத்திருக்கேன்.

தீர்த்தமலை, ஞானத்தேடல் இருக்கற ஒவ்வொருத்தரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய ஒரு சக்திமையம்...அதுல மாற்றுக்கருத்தே இல்ல.

திருவண்ணாமலை மாதிரி..இங்கயும் நிறைய சாமியார்கள் சுத்திட்டு இருக்கறத பார்க்கமுடியும்.


ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம்,அக்னி தீர்த்தம் இப்படி மிகமுக்கியமான தீர்த்தங்கள்..,

சின்ன மலைதான்..அதனால, ரொம்ப கஷ்டப்பட்டு மலை ஏறனுமோங்கற பயமெல்லாம் தேவையில்ல..

ஆனா, மேல ஏறினபிறகுதான், நாம வேற ஒரு உலகத்துக்குள்ள வந்திருக்கமோன்னு தோணும்.

அந்த அழக என்னோட வார்த்தைகள்ல வர்ணிக்கறதன்மூலமா, முழுமையா உங்களுக்கு உணர்த்தமுடியாது.., ஒவ்வொருத்தரும் அத நேர்ல தரிசிச்சுதான் உணரமுடியும்..,

முதல்ல அனுமந்த தீர்த்தம் போய் குளிச்சிட்டுதான், தீர்த்தமலை போகனும்னு ஒரு ஐதீகம்..,

அனுமந்த தீர்த்தத்துல பக்தர்கள் நீராடும் காட்சி!

 அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போகும்போதே, வழியிலயே தென்பெண்ணையாறு குறுக்கிடும் (கீழே இருக்குற படத்துல கோயில் பேக்டிராப்ல ஒரு பிரிட்ஜ் தெரியுது பாருங்க, அதுதான் மெயின் ரோடு, அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போறவழி..),

அனுமந்த தீர்த்தம்

இங்கதான் ஆற்றங்கரையில சின்னதா ஒரு கோயிலோட அனுமந்த தீர்த்தம் இருக்கு..

இங்கயிருந்து 12 கிலோமீட்டர் திரும்பவும் பயணம் தொடர்ந்தா, தீர்த்தமலை..,

நல்லதொரு சக்திமையத்துக்கு போய் வந்த திருப்தியை தீர்த்தமலை தரும்ங்கறத மட்டும் என்னால உறுதியா சொல்லமுடியும்..அதனால, தீர்த்தமலைக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்து உங்க அனுபவத்தயும் பதிவு செய்யுங்க..,

சில வலைப்பதிவர்களின் தீர்த்தமலை பயண அனுபவம், படங்களோட இங்க இருக்கு, அதயும் பாருங்க..,

தீர்த்தமலை ஓர் பயணப் பதிவு

தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

Thursday, August 22

இமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..!

இமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்..,

அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன ஒரு ஆள் உட்கார்ற அளவு இருக்கும்..இல்லன்னா..இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும்.. அவ்ளோதானே..,அப்படின்னுதானே கேக்கறீங்க..,

ஆமாங்க..நாமெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஆச்சரியமான தகவல்கள, இந்த இமயமலை குகைகளுக்குள்ள நேரடியா பாத்துட்டு வந்தவரோட அனுபவத்ததான் நாம இப்ப பேசிகிட்டு இருக்கோம்..

ஞானி லட்சுமணன்..நேத்துதானே..பிரபஞ்சவெளியில நம்ம முன்னால வந்து ஆஜராகி இவரு தன்னையும், இன்னும் சிலரையும் நமக்கு அறிமுகப்படுத்தினாரு…,(முந்தைய பதிவு)

இமயமலை குருகுல வாசத்துல ஞானி லட்சுமணன் கொஞ்சநாள் இருந்திருக்காரு..அதனால, அந்த அற்புத அனுபவங்கள பத்தி நமக்கு சொல்லும்படி கேட்டிருந்தோம்.. 

இதோ ..அவரே அந்த அனுபவங்கள சொல்றாரு..,

ஞானி லட்சுமணன்

“…..11 வயசுல என்ன அழைச்சிட்டுப்போன குருநாதர், ஒரு வருஷம் வரைக்கும் எதுவுமே சொல்லித்தரல..,

காடு,மலைன்னு என்ன இழுத்துட்டு சுத்தினாரு..பசிச்சா, அங்க இருக்குற எதாவது ஒரு வீட்டுல பிச்சை எடுத்து, அத சாப்பிடுவோம்.

தூக்கம் வந்தா, அது காடு, மேடோ..ஏன் சுடுகாட்டுல கூட படுத்து தூங்கியிருக்கோம்.

இப்படியே ஒரு வருஷம் போனது. பெரிய ஜமீனோட வாரிசா இருந்தும் எந்தபொருள்மேலயும் ஆர்வமில்லாம இருந்த என்னோட நிலை, குருவுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு..

அதுக்குப்பின்னாடிதான், ஒவ்வொரு விஷயமா எனக்கு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினாரு…

11 வயசுல குருவோட வந்த நான் ஒரு வருஷம் சும்மா இருந்தேன். அதுக்குபிறகுதான், தொடர்ந்து பலவிதமான யோக மார்க்கங்களை குரு மூலமா கத்துகிட்டேன்.. என்னோட 23வது வயசுல முதல் குருகுல வாசம் முடிஞ்சது.

அப்போதான்..என்னோட குரு எனக்கு அடுத்த ஒரு உத்தரவு கொடுத்தாரு.
அதுதான் இமயமலை குருகுலவாசம்…,

ஆமாங்க..என்னோட அடுத்த குருகுலவாசம்..இமயமலைப்பகுதிகள்லதான்..!

அங்க இமயமலையிலயும், அதயொட்டின திபெத் பகுதியிலயும் ஏராளமான லாமாக்கள் தீவிரமான ஆன்மீக தேடலோடு தொடர்ந்து பலவிதமான பயிற்சிகள்ல ஈடுபட்டு ஞான நிலைக்கு உயர்வாங்க..,

அப்படி சில முக்கியமான லாமாக்கள் கிட்ட என்னோட குரு என்ன பயிற்சிக்காக அனுப்பி வச்சாரு.

லாமாக்கள்  எனக்கு ஒரு 6 வருஷம் சில முக்கியமான பயிற்சிகள சொல்லிக்கொடுத்தாங்க..

அப்பதான்..இந்த இமயமலை குகைகளுக்குள்ள இயங்கிட்டு இருக்குற குருகுலங்களுக்கும் நான் போகிற சந்தர்ப்பம் கிடைச்சது.

நாம யாருமே..அவ்ளோ பெரிய குகைகள இதுவரை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.

இமயமலையில அப்படி வெளியே தெரியாத நிறைய குகைகளுக்குள்ள..நிறைய குருகுல பயிற்சிகள் இன்னைக்கும் தொடர்ந்து நடந்துட்டுதான் இருக்கு..,

இமயமலை குகை குருகுலங்களில் இதுவும் ஒன்று

அப்படி ஒரு குகைக்குள்ளதான் என்னையும் அழைச்சிட்டு போனாங்க..,

அங்க வழக்கமான நடைமுறை என்னன்னா..,

8 வயசு சிறுவனா, இந்த குகைக்குள்ள போறவங்க, பல வருஷம் உள்ளேயே இருந்து, எல்லா விதமான பயிற்சிகளையும் முடிச்சு, வளர்ந்து ஆளாகி, அதோட ஒரு அனுபூதி அடைஞ்ச குருவாத்தான் (The Enlightened Master) வெளியே வருவாங்க..,

அதுவரைக்கும், அவங்க வெளி உலகத்தையே பார்க்க முடியாது.

இந்த குகைக்குள்ளேயே, அங்க இருக்கறவங்களோட உணவு தேவைக்கான விவசாயம் செய்றாங்க..பாலுக்காக மாடுகள வளர்க்கறாங்க..,

ஆனா, இங்க ஒரு நாளைக்கு 2 ரொட்டி, ஒரு டம்ளர் பால் மட்டும்தான் எல்லாருக்குமே உணவு…அதுக்குமேல யாருக்கும் கிடையாது.

இமயமலை குகைகளுக்குள்ள இப்படி ஒரு இடம், அதுவும் விவசாயம் செய்யற மாதிரியெல்லாம் இருக்குமான்னு..அங்க அத நேர்ல பாக்கற வரைக்கும் எனக்கும் தெரியாது.

ஆனா, குகையோட வெளியில இருந்து பார்த்தா..உள்ளே அப்படி ஒரு அமைப்பு இருக்கறதே யாருக்கும் தெரியாது..அந்த குகையோட நுழைவு வாயில்கூட ரொம்ப சின்னதா….ஒரு ஆள் நுழையறதே ரொம்ப கஷ்டமாதான் இருக்கும்..உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்டம்..,

என்னோட குருவோட உத்தரவால, எனக்கு அந்த குகைக்குள்ளயும் சில பிரத்யேக பயிற்சிகள் கிடைச்சது.

இமயமலையில கொஞ்சநாள், அதுக்குப்பிறகும் என்னோட குருவோட கொஞ்சநாள்னு, இப்படியே என்னோட 36 வயசு வரைக்கும் என்னோட இரண்டாவது குருகுலம் நடந்தது.

ஞானமார்க்கத்த பொருத்தவரைக்கும் இரண்டு வழிகள் இருக்கு..அதுல ஒன்னு துறவியாகி ஞானியாவது..இன்னொன்னு..இல்லறத்துல இருந்தபடியே ஞானியாவது..,

இதுல என்னோட குரு எனக்கு உபதேசித்தமுறை..இல்லற ஞானி..,

அதனால, குருவருளால, எனக்கு திருமணமும் நடந்தது.

இல்லறத்துல இருந்தபடியே மக்கள்தொண்டு மூலமா ஞானத்தை அடையறதுதான் பேரானந்தம்..அந்த வழியிலதான் நானும் பயணித்தேன்..,

சீனா, ரஷியா தவிர உலகத்துல இருக்குற 220 நாடுகளுக்கு பரலோக சஞ்சாரமா பயணம் செஞ்சு உலகம் முழுக்கு இருக்குற யோக முறைகள ஆய்வு செஞ்சேன்.

அதன்மூலமா, உலகத்துல வெவ்வேறு வடிவங்களோட இருக்குற யோகமுறைகளோட அடிப்படை ஒண்ணுதான்னு புரிஞ்சுகிட்டேன்.

அதனடிப்படையில, உருவாக்கப்பட்டதுதான் இந்த ஞானபோதனாமுறை,

நம்ம உடம்புல, ஞான ஜோதி –5, கர்ம ஜோதி –5, ஆத்ம ஜோதி –1 ன்னு, மொத்தம் 11 ஜோதி நிலைகள் இருக்கு..

அத உணர்த்தத்தான் நம்ம சபையில 11 அணையாஜோதி ஏற்றப்பட்டிருக்கு.

ஒவ்வொருத்தரோட, சக்தியும் அவங்களுக்குள்ளேயேதான் இருக்கு..கடவுள்னு வெளியே எதுவும் இல்ல..கடவுள உருவ வழிபாட செய்யறது, அதுவும்  ஒரு முறை ..அவ்ளோதான்..ஆனா, நாமெல்லாம் இந்த முறையில சிக்கிகிட்டு அடிப்படைய விட்டுட்டோம்…,

அதனாலதான் இப்போ..இந்த அருள் பேரொளி சபை தொடங்கப்பட்டிருக்கு..,

ஞானமடையனும்னு தேடல் இருக்கறவங்க..இங்க வந்து அதுக்கான யோக முறைகள இலவசமா கத்துக்கலாம்..இது ஒரு உண்டியல் இல்லாத கோயில்.., ஆனா, உங்க தேடல் உண்மையா இருக்கணும்,அது ஒன்னு மட்டும்தான் நிபந்தனை, அப்படி இருந்தீங்கன்னா,  அதுக்கான வழிகாட்டுதல் கண்டிப்பா கிடைக்கும்..அது தானா உங்களுக்குள்ளயே நடக்கும்..உங்களால நிச்சயம் அந்த மாற்றங்கள உணரமுடியும்..”

இப்படியெல்லாம் உலகமக்களுக்கு ஞானப்பாதைக்கு புது வழிகாட்டிய ஞானி லட்சுமணன்…,

இதோ..இங்கேதான்..தஞ்சாவூரில் 2011 ஆகஸ்ட் 23ம்தேதியன்னிக்கு(இதுபத்தி ஒரு வருஷத்துக்கு முன்னாலயே தன்னோட சீடர்கள்கிட்ட அறிவிச்சிட்டாரு) அருள்பேரொளிசபையில் மஹாசமாதியடைந்திருக்கிறார்..,

அன்று முதல்..இங்கு சூட்சும ரூபத்தில் இருந்தபடி, இன்னும் பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்…

அவரது மஹாசமாதி தினமான நாளை(ஆகஸ்ட்23ம்தேதி) இங்கே,(அருள்பேரொளிசபை,எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு, தஞ்சாவூர் 
போன்; 04362-257595, மொபைல் ; 94867 42791) குருபூஜை நடைபெறுகிறது..

வாருங்கள்..அந்த குருவருள் துணையோடு..நமக்குள் இருக்கும் ஜோதியை தரிசிப்போம்..குருவேசரணம்..!

11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..!

11 அணையாதீபம்..அருள் பேரொளி..! 

மன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல..

கோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை..,

இந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு வந்திருந்தாரு ஒரு சாமியார்..,

“… உன்னோட மனைவிக்கு இருக்குற மலடின்ற குறைய நான் நீக்கறேன். உனக்கு ஒரு  குழந்தை பொறக்கும். ஆனா, 11 வயசுவரைக்கும்தான் அது உன்னோட குழந்தை. அதுக்கு பிறகு, அத நீ எங்கிட்ட ஒப்படைச்சிடனும்.., உனக்கு மட்டுமே அந்தக்குழந்தை சொந்தம்னு நினைச்சின்னா அதோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, அந்த குழந்தை இந்த உலகத்துக்கே வழிகாட்டப் போகுது….”

சாமியாரோட இந்த டீலுக்கு ஜமீன் ஒத்துக்கிட்டாங்க..,

அதே மாதிரி ஜமீனோட நாலாவது மனைவிக்கு இரட்டைக்குழந்தை பிறந்து, 

அதில் ஒன்னு மட்டும் உயிர் பிழைச்சிருக்கு..,

அந்த குழந்தையோட நடவடிக்கைகளோ பிறந்ததுல இருந்தே  ரொம்ப வித்யாசமானதா  இருந்திருக்கு..,

அவரு வளந்து 6 வயசு சிறுவனா இருந்தப்ப..விநாயகருக்கு கொழுக்கட்டை செஞ்சு படைச்சிருக்காங்க..,

பூஜையெல்லாம் முடிஞ்சதும், “…ஏன் விநாயகர் வந்து கொழுக்கட்டைய சாப்பிடல..” னு சிறுவன் கேள்வி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு யாருக்குமே தெரியல.

சாதிவெறி தலைதூக்கி ஆடினகாலமது…,

ஊருக்கு வெளியே ஆத்தங்கரையோரமா  தாழ்ந்த சாதியினரா இந்த சமூகம் அடையாளப்படுத்தி வச்சிருந்த ஜனங்களோட குடிசைங்க இருக்கு.
இவரு தினமும் அங்கபோய் அந்த குழந்தைங்களோட விளையாடிட்டு, அவங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு வந்திடுவாரு..யார் சொன்னாலும் கேக்கமாட்டாரு…,

ஒன்னே..ஒன்னு..கண்ணே..கண்ணுன்னு..தவமா தவமிருந்து பெத்த பிள்ள..இப்படி ஏறுக்குமாறா பண்ணுதேன்னு..எல்லாருக்கும் கவலை..ஆனா, எதுவும் செய்யமுடியல..,

அதனால..தினமும் வெளியிலபோய் விளையாடிட்டு வர்ற சின்னஜமீனுக்கு மஞ்சள் அபிஷேகம் செஞ்சு தீட்டு கழிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போவாங்க..,

தென்னிந்தியாவோட பழமையான சிவன்கோயில் திருக்களர்ல இருக்கு. இந்த கோயிலோட பரம்பரை அறங்காவலரா இந்த ஜமீன் குடும்பம்தான் இருந்தது.
இந்தக்கோயில்ல ஒரு அம்மன் சிலைய புதுப்பிச்சு அதுக்கான ஒரு பூஜை ஏற்பாடு செய்திருந்தாங்க.

இதுல சின்னஜமீனுக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி முதல் மரியாதை கொடுத்து அவர பூஜை செய்யச் சொன்னாங்க.

அதுக்கு கொஞ்சமுன்னதான், அவரு அந்த கோயிலுக்கு வெளியே உக்காந்துட்டு இருந்த அந்த சிலைய செஞ்ச ஸ்தபதி கிட்ட போய்,
“…நீங்க ஏன் உள்ளே வராம..வெளியவே உக்காந்திட்டு இருக்கீங்க..”  ன்னு கேட்டிருக்காரு.

அந்த ஸ்தபதியோ, “…நேத்து வரைக்கும் என்னோட காலுக்கு கீழே இருந்த கல்லு அது, என்னாலதான் அழகான வடிவம் கொடுக்கப்பட்டு இன்னைக்கு அது கர்ப்பகிரகத்துல சாமியா போய் உக்காந்திருக்கு…அப்படின்னா..யாரு கடவுள்..படைச்சவனா..? படைக்கப்பட்டதா…?..” ன்னு ஸ்தபதி கேட்க,

சிறுவனுக்குள்ளே எங்கயோ பொறி தட்டிருச்சு…,

அவ்வளவுதான், “..நான் இந்த பூஜைய செய்யமாட்டேன்..” ன்னு சொல்லிட்டு போயிட்டாரு சின்ன ஜமீன்.

இதனால..ஜமீனுக்குள்ளயே..புகைச்சல் ஆரம்பமாயிடுச்சு…எல்லாமே, ஏறுக்குமாறா பண்ணிட்டு இருக்குற சின்னஜமீன, இனியும் உயிரோடு விடக்கூடாதுன்னு சிலர் முடிவு பண்ணிட்டாங்க..,

11 வயசு சிறுவனோட உயிருக்கு அவரோட உறவினர்களாலயே ஆபத்து ஏற்பட்டுடுச்சு…

சிறுவனோட உயிரை எப்படி பாதுகாக்கறதுன்னு ஜமீன் தவிச்சிட்டு இருக்குற சமயத்துலதான்…

பலவருஷங்கள் கழிச்சு திரும்பவும் அங்க வந்தாரு அந்த சாமியாரு…அப்ப சரியா அந்த சிறுவனுக்கு வயசு 11.

தான் ஏற்கனவே சொன்னத நினைவுபடுத்தினாரு, “..உன்னோட மகன் உயிரோட இருக்கணும்னா..எனக்கு கொடுத்த வாக்குறுதிபடி என்னோட அனுப்பிடு..,

இனி அவன் இந்த உலகத்துக்குதான் சொந்தம்..இல்லன்னா…இப்பவே அவனோட உயிருக்கு சிலர் கெடு வச்சிட்டாங்க..உனக்குதான் அவன்னு சொந்தம் கொண்டாடினா, அவன உயிரோட பாக்கமுடியாது…”

எங்கயிருந்தாலும் மகன் உயிரோட இருந்தாபோதும்னு ஜமீன் அந்த சாமியாரோட, சிறுவன அனுப்பிவச்சிட்டாங்க…,

அப்போ..இந்த 11 வயசு சிறுவன சிஷ்யனா அழைச்சிட்டுப்போன குருவுக்கு வயசு 360.

சாகாக்கலைய பயின்ற அந்த குருவுக்கு இந்த சிறுவன்தான் கடைக்குட்டி சீடன்…,

அவருக்கு மொத்தம் அஞ்சு சீடர்கள்..அவங்களோட பேரக்கேட்டீங்கன்னா…நிஜமாவே…ஆச்சரியப்படுவீங்க..,

அவரோட முதல் சீடர்…வடலூரைச்சேர்ந்தவர்,

இரண்டாவது சீடர்….ஷீரடி சாய்பாபா,

ஷீரடி சாய்பாபா

மூன்றாவது சீடர்…(இவரது பெயரையும், படத்தையும் இங்கு சேர்ப்பதை இவரது வழிவந்தவர்கள் விரும்பவில்லை),


நான்காவது சீடர்…ஆந்திரா, கொலகமுடி வெங்கய்யா சாமி,

கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

கடைசி மற்றும் 5 வது சீடர்தான் இந்த 11 வயது சிறுவன்..,

இதுல ஒவ்வொருவருக்கும்  குருவா வந்து வழிகாட்டினவருக்கு ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேற பேரு…,

அதுக்கு சில சூட்சுமமான காரணங்கள் சொல்லப்படுது.(அதையெல்லாம் விளக்கிச்சொல்ல குருபரம்பரை பின்னால் வழிகாட்டும்)

இந்த சிறுவனுக்கு ரெண்டுகட்டமா பலவருஷ குருகுல வாசம் நடந்திருக்கு.
அவருதாங்க, இன்னைக்கு நாம பாக்கப்போற  ஞானி லட்சுமணன்..!


ஞானி லட்சுமணன்

இவரு மஹாசமாதி ஆன நாள்..2011 ஆகஸ்ட் 23ம்தேதி....,

நாளைக்கு(ஆகஸ்ட்23ம் தேதி) இவரோட மஹாசமாதி நாளை முன்னிட்டு, இவர் சமாதியான தஞ்சாவூர் ஆசிரமவளாகத்துல குருபூஜை நடக்குதுங்க..அதுக்கான பதிவுதான் இது…!

தன்னத்தேடி வர்றவங்களுக்கு, ஞானமடைவதற்காக இவரு காட்டினவழிதான்….அருள் பேரொளி சபை..!

“…அருட்பெரும்ஜோதி..அருட்பெரும்ஜோதி…அருட்பெரும்ஜோதி…தனிப்பெரும்கருணை…”ன்னு வள்ளலார் ஒரு அணையாஜோதிய ஏற்றிவச்சு, ஞானத்துக்கு ஜோதிவழிபாட்டை அறிமுகப்படுத்தினாரு.

ஞானி லட்சுமணன் 11 அணையாஜோதிகள ஏற்றிவச்சு ஞானத்துக்கான புதியதொரு வழி இதுன்னு சொல்லியிருக்காரு.

நாளை  அவரோட மஹாசமாதி (ஆகஸ்ட் 23ம்தேதி) தினம்…

அருள் பேரொளி சபை, எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு,தஞ்சாவூர்(போன்;04362-257595, மொபைல்-94867 42791) 

இந்த முகவரியில இருக்குற அருள் பேரொளி சபை வளாகத்துல தான் இந்த குருபூஜை நடக்க இருக்கு.


அருள்பேரொளிசபை,தஞ்சாவூர்

இங்க தரப்படுகிற பிரசாதம்…திருநீறு. அது ஒரு சூட்சுமமான மருந்து

எல்லா நோய்களுக்குமான மாமருந்துன்னு பயனடைஞ்சவங்க  சொல்றாங்க..,

23ம்தேதி அதிகாலை…பிரம்ம மூகூர்த்தத்துல…நடக்குற குருபூஜையில..மிகத்தெளிவா சில அதிர்வலைகள உணரமுடியும்னு அனுபவிச்சவங்க சொல்றாங்க..இதெல்லாம், வார்த்தைகள்ல சொல்லமுடியாதவை..இவற்றை அனுபவிச்சுமட்டுமே பார்க்கணும்..,
அதுவும் குருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்..!

டெயல்பீஸ்;

இந்த 5 சீடர்கள்ல ஒருத்தரான கொலகமுடி வெங்கய்யா சாமி பத்தி டீடெய்ல்ஸ் தேடும்போதுதான் தெரிஞ்சது, அவரும் மஹாசமாதியானது இதே ஆகஸ்ட்டுலதான்…,


கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

அதனால ஒவ்வொரு வருஷமும், ஆந்திரா கொலகமுடியில ஆகஸ்ட் 18 ல இருந்து 24 வரைக்கும் வெங்கய்யா சாமிக்கு ஆராதனா உற்சவம் நடத்தறாங்க.
இந்த விழாவுக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் 5 லட்சத்துக்கும் மேல பக்தர்கள் வராங்களாம்..அதுக்காக பிரம்மாண்டமான  விழா ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு,

அப்படின்னா அந்த மஹாகுருவோட பர்சனாலிட்டி எந்தளவுக்கு பக்தர்கள்கிட்ட ரீச் ஆகி இருக்கும்னு ஆச்சரியத்த ஏற்படுத்தினது இந்தசெய்தி....!

திரும்பவும் நம்ம விஷயத்துக்கு வருவோம்..,

ஞானி லட்சுமணன்..தன்னோட குருகுல வாசத்துல.. ,

ஒரு 6 வருஷத்த இமயமலை குகைகள்ல கழிச்சிருக்காரு…,

அதுல இதுவரைக்கும் நாம கேள்வியே பட்டிராத…பல யோக ரகசியங்கள்…குருகுல வாழ்க்கை முறைகள்னு.. நம்மள ஆச்சரியப்படுத்துற ஏராளமான அதிசயங்கள் இருக்கு…அதெல்லாம் பிரிதொரு பதிவில், தொடரும்…விரைவில்…,

அதனால..,

மறக்காம..நாளைக்கு…(ஆகஸ்ட்23ம்தேதி)..ஞானி லட்சுமணன் மஹாசமாதி தின குருபூஜையில கலந்துக்கோங்க.., எல்லாருக்கும் குருவோட ஆசி  கிடைக்க எல்லாருமே பிரார்த்திப்போம்…குருவேசரணம்..!

பின்குறிப்பு; ஞானி லட்சுமணன் அவர்களுடன் வாழ்ந்து அவருடைய ஞான அனுபவங்களை நேரடியாக அவரிடமிருந்தே கேட்டறிந்த ஞானியின் பிரதான சீடர் வெங்கட் நரசிம்மன் சொல்லக்கேட்டு எழுதப்பட்டதே இந்தத் தகவல்கள்.(இவர்தான் தற்போது அருள் பேரொளி சபையினை கவனித்து வருகிறார்) 

Wednesday, August 21

விசிறிசாமியார் பிறந்த கிராமத்தில் ஒரு விழா...!

பகவான் யோகிராம் சுரத்குமார்

சுவாமிஜி பிறந்த ஊர் உபியில(உத்திரபிரதேசம்) இருக்குற நரதரா(Nardara) அப்படிங்கற ஒரு அழகான கிராமம்..,

பகவான் அவதரித்த திருத்தலம்

கங்கைக்கரையோரமா இந்த கிராமம் அமைஞ்சிருக்கு..,

நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பாக்கத்தேவையில்லன்னு சொல்வாங்க.. ஆனா, அவரு இந்த உலகத்துல ஸ்தூல உடம்போட நடமாடின எல்லா இடங்களுமே, நமக்கு அவரோட இருப்பை உணர்த்துற இடங்கள்..அதனால, அவரு பிறந்த இடத்தையும் நாம விட்டுவைக்கத் தேவையில்ல..,

அதனாலயோ, என்னவோ..இப்போ சுவாமிஜியோட பிறந்த ஊருலயும் அவரோட நினைவா ஒரு அடையாளத்த பதிக்கப்போறாங்க..

இந்த மாசம் (ஆகஸ்ட்) 28ம்தேதி, அன்னைக்கு...உத்திரபிரதேசத்துல இருக்குற நரதரா கிராமத்துல பகவான் யோகிராம் சுரத்குமார் அவங்களோட ஜன்மஸ்தான் திறப்புவிழா நடக்க இருக்கு.

இத திறந்துவைக்கப்போறவர் நீதியரசர் திரு.அருணாச்சலம் அவர்கள்...,

பகவான் அவதார திருத்தலத்தில் ஒரு திருவிழா

ஆகஸ்ட் 28ம்தேதி அதிகாலை 5மணிக்கு ஹோமத்தோட நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுது..,

அன்னைக்கும் முழுதும் சாமிகளோட நாமசங்கீர்த்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க..,

அவ்ளோதூரம் போகமுடிஞ்சவங்க போய் வரலாம்..,

குழந்தையா சாமிஜி ஓடியாடின, விளையாடின அந்த பால்ய கால அனுபவங்களையெல்லாம் நிரப்பி வைத்திருக்கும், அந்த புனிதமான இடங்களையெல்லாம், பாத்து தரிசனம் செஞ்சுட்டு வரலாம்..,

முடியாதவங்க..(என்னையும் சேர்த்துதாங்க..) இங்கயிருந்தே சாமியோட நாம சங்கீர்த்தனம் செஞ்சாலே போதும்ங்க..

அந்த கருணைக்கடலோட எல்லையற்ற அருளாற்றல் நம்மையெல்லாம் சுற்றிநிற்கும்..,

யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
ஜெயகுருராயா..!

Tuesday, August 20

முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடாதீங்க..! இயற்கைச்சீற்றங்களைக் கணிக்கும் ஜோதிடரின் எச்சரிக்கை.!

"...Space ல இருக்குற விஷயங்கள நமக்கு ரிசீவ் பண்ணிக் கொடுக்கறவங்கதான்  ரிஷிகள்..

..அப்படித்தான் நமக்கு இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரமும் கிடைச்சிருக்கு...

ஆனா, இது தெரியாம, ஜோதிட சாஸ்திரத்த வியாசர்தான் உருவாக்கினார்...

பராசரர்தான் எழுதினார்னு எல்லாம் நாம சொல்லிட்டு இருக்கோம்...அவங்க மூலமா இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ஜோதிடம்..."

இப்படி பொட்டுல அடிச்சமாதிரி பேசும் இவருதாங்க ராமச்சந்திரன்..,

ராமச்சந்திரன்


வராஹிமிகிரரின் 'பிரஹத் சம்ஹிதா' மற்றும் வேத நூல்களோட அடிப்படையில கோள்களோட நிலைப்பாட்டை கண்டுபிடிச்சு, அதன்மூலமா ஒவ்வொரு வருஷமும், உலகம் முழுக்க,  எங்கெங்க, என்ன மாதிரியான இயற்கை சீற்றம் வரும், மழை, வெயில் எப்படி இருக்கும்..,நிலநடுக்கம், புயல் இப்படி எல்லாத்தையும் பட்டியல் போட்டு முன்னாடியே பத்திரிகைகள்லயும், வானியல் ஆய்வாளர்களுக்கும் அனுப்பிவைக்கறத பல வருஷங்களா தொடர்ந்து செய்துவர்றாரு..,

ஜோதிடத்துல இருக்குற சூட்சுமமான விஷயங்கள புரிஞ்சு வச்சிருக்கிற இவருக்கு, ஜோதிடம் முழுநேர தொழில் அல்ல....கன்ஸ்ட்ரக்ஷன்தான் இவரோட தொழில்.

தனிநபர்களுக்கும் ஜோதிடத்து மூலமா நுட்பமா சில தீர்வுகள சொல்றாரு ராமச்சந்திரன்..,

அதுபத்தின விவரங்களையும், இயற்கைசீற்றங்களுக்கு அவர் கணிப்பதுபத்தியும், சின்னதா (இல்லைங்க..கொஞ்சம் பெருசுதான்..) ஓர் உரையாடல்..,

இனி...தொடர்வது ராமச்சந்திரன்,

"....1995ல தான் இயற்கை சீற்றங்கள் பத்தி முதன்முதலா ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தேன்.

அது அப்படியே தொடர, 2002ல ஆனந்த விகடன் எனக்கு ஒரு பெரிய அறிமுகத்த கொடுத்தது.

அதுல தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும்...இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே போகும்னு நான் கொடுத்திருந்த கணிப்புகள் உண்மையானது.

அதேமாதிரி 2004 நடந்த சுனாமிபத்தியும் முன்கூட்டியே கணிச்சிருந்தேன்..ஆனா,  சுனாமின்னு நான் பேர்கொடுக்கல..ஒரு பூகம்பத்தால பேரழிவு வரும்னு மட்டும் சொல்லியிருந்தேன்.

இதோ..இந்த 2013 வரைக்கும் நான் கணிச்சி சொல்லிட்டு இருக்குற தகவல்கள் 70 % அப்படியே நிகழ்கிறது.

இப்ப பெய்யுற மழை உள்பட முன்னாடியே நான் கணித்து சொன்ன தகவல்கள் பத்திரிகைகள்ல செய்தியா வந்திருக்கு.

சமீபத்தில் வெளியான செய்தி

எல்லாத்துக்குமே நம்ம மூதாதையர் வழி செஞ்சு வச்சிருக்காங்க.அத நாம முறைய பயன்படுத்திக்கிறது மட்டும்தான் நம்மோட புத்திசாலித்தனம்.

எனக்கு முழுநேரமும் இந்த ஆய்வுகள செய்யறதுக்கான நேரமும் இல்ல..அதுக்கான வசதியும் இல்ல. நான் என்னோட தொழில்,குடும்பம் இதையும் கவனிச்சாகனும்.

அதனாலதான், அரசு இந்த ஆய்வுகள செய்ய ஆட்களையும்,வசதிகளையும் செய்துகொடுத்தால் இந்த வழிமுறைகளை அவங்களுக்கு கொடுத்து உதவ தயாராக இருக்கேன்.

நம்முடைய  வேதங்கள்ல்ல இருக்குற வழிமுறைகளைத்தான் நான் எடுத்து பயன்படுத்தி கணக்கிடுறேன்.

இத முறையா பயன்படுத்தினா, வரப்போகிற இயற்கைச் சீற்றங்களையும்,   பெரும்சேதங்களையும் முன்கூட்டியே கணிக்க முடியும்,

பெரும்அழிவினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களை காப்பாத்தலாம்...

எவ்வளவுதான் விஞ்ஞானம் பேசினாலும், நம்ம எல்லாரையும் இயக்குற சக்தி ஒன்னு இருக்குங்கறத நாம நம்பித்தான் ஆகணும்.

ஆனானப்பட்ட ஐன்ஸ்டினே அதுபத்தி இப்படி சொல்லியிருக்காரு.

"....Everything is determined...by forces over which we have no control.
It is determined for the insect as well as for the star.
Human beings, vegetables, or cosmic dust.
-We all dance to a mysterious tune, intoned in the distance by an invisible piper."
-Albert Einstein

(எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..,
அந்த இயக்கும் சக்தியை நம் யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
ஒரு சாதாரண பூச்சியிலிருந்து நட்சத்திரம் வரை எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..
மனிதர்கள்,காய்கறிகள்,இந்த பிரபஞ்ச தூசு வரை,
-எங்கோ தொலைவில் இருந்து இசைக்கப்படும்,
ஒரு கண்ணுக்குத் தெரியாத மர்மஇசை நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறது..
–ஆல்பரட் ஐன்ஸ்டின்)

அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகிட்ட நாம நம்பள ஒப்படைச்சிடணும்.அதக்கப்புறமா, ஒரு புல்லாங்குழல் வழியா காத்து நுழைஞ்சி இனிமையான நாதமா வர்றமாதிரி நம்ம வழியா பல விஷயங்கள் நடக்கத்தொடங்கிடும்.

அப்படித்தான்  இந்த ஜோதிட அற்புதங்கள் என் மூலமா, பலவிஷயங்கள வெளியுலகத்துக்கு தெரிவிப்பதா நான் நம்புறேன்.

ஜோதிடத்த நான் கத்துக்க தொடங்கினதுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்...,

'....அப்ப எனக்கு 18 வயசு. என்னோட அப்பா வாத்தியார்.
என்ஜினியரிங்  படிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா எங்கப்பாவோ கிராஜூவேஷன்தான்னு ஒரே பிடிவாதமா நின்னாரு.

அப்பதான் என்னோட சொந்தத்துல ஒருத்தர் "...தம்பி, உனக்கு இப்போ ஏழரை நாட்டு சனி நடக்குதுப்பா, அதனாலதான், இப்படியெல்லாம் நடக்குது.." ன்னு ஆறுதல் சொன்னாரு.

அதேமாதிரி,நான் ஆசைப்பட்ட என்ஜினியரிங் படிக்கமுடியல..
பிஎஸ்சி(பிசிக்ஸ்) தான் படிச்சேன்.

அப்பதான் எனக்கு முதமுதலா ஜோசியத்து  மேல ஒரு ஆர்வம் வந்தது.

அது என்ன ஏழரை நாட்டு சனி..அது எப்படி என்னோட விருப்பத்துக்கு எதிரா செயல்படுதுன்னு தெரிஞ்சிக்க ஜோசியத்த படிக்க ஆரம்பிச்சேன்.

என்னோட சுயஜாதக ஆராய்ச்சியில ஈடுபட்டேன். அப்போதான் என்னால பல உண்மைகள புரிஞ்சிக்க முடிஞ்சது.

முதமுதலா என்னோட 23 வயசுல என் உறவுக்காரர் ஒருத்தர் தன்னோட மகனுக்கு திருமணம் ஆகுமான்னு கேட்டாரு.

அவரோட ஜாதகத்த பார்த்த நான் உங்க மகன் ஒரு விதவையவோ, இல்லன்னா ஒரு டைவர்சியையோதான் கல்யாணம் செய்வாங்கன்னு சொன்னேன்.

அவங்களுக்கு பயங்கர ஷாக்..ஆனா, கொஞ்சநாள்லயே நான் சொன்னமாதிரி

அவரோட மகன் ஒரு டைவர்சியதான் கல்யாணம் செஞ்சாரு.

அதேமாதிரி எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு  தன்னோட பொண்ணுக்கு 45 வயசாயிடுச்சு....இனிமே, கல்யாணமாகுமான்னு கேட்டாரு.

அவங்க ஜாதகத்த பாத்துட்டு இவங்களுக்கு ஏற்கனவே, கல்யாணமான ஒருத்தரோடதான் கல்யாணமாகும்னு சொன்னேன்.

அந்த பெண் அப்போ எம்பில் படிச்சிட்டு இருந்தாங்க.அவங்களோட மாஸ்டரா இருந்தவருக்கும் அவங்களுக்கும் பழக்கமாயிருக்கு. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பெண்பிள்ளைகளும் இருந்தது. இருந்தும் அவரைதான் இந்தப்பெண் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.

கடையில ஒரு பொருள் வாங்கினா அதோட யூசர்ஸ் மேனுவல் தருவாங்களே, அதேமாதிரிதான் ஜோதிடமும்..
ஒரு மனுஷனோட யூசர்ஸ் மேனுவல்தான் அவனோட ஜாதகம்...,

ஆனா, இப்போ பெரும்பாலானவங்க ஜோதிடத்த  பணம் பண்றதுக்கான ஒரு கலையா மாத்திகிட்டாங்க.

ஆனா, ஜோதிடம் நிராதரவானவங்களுக்கு உதவறதுக்கான ஒரு கலை.

பொதுவா ஜோதிட ஆய்வுக்கு இருவகையான பஞ்சாங்கங்களை பயன்படுத்துவோம். ஒன்னு வாக்கியப் பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.ரெண்டுக்குமே 8 நிமிட வித்யாசம் இருக்கு.

என்னோட ஆய்வுபடி திருக்கணித பஞ்சாங்கமே கணிப்புகளுக்கு துல்லியமா இருக்கு.

திருமணத்திற்காக ஜாதகப்பொருத்தம் பார்க்கிறவங்க சில விஷயங்கள்ல்ல கவனமா இருக்கணும்..

திருமணத்துக்குன்னு பாக்குற பத்து பொருத்தத்துலயே நாடி பொருத்தம்னு ஒன்னு இருக்கு.

அதுல பிளட் குரூப் பத்தி தெளிவா இருக்கு. கணவன், மனைவி ரெண்டுபேருக்கும் பொருந்தாத பிளட் குரூப் இருந்தா குழந்தை பிறப்புல பிரச்னை இருக்கும்.(இதுபத்தி விரிவான பதிவு..பின்னர் எழுத உத்தேசம்)

அதுவும் இப்பவெல்லாம், முதல் குழந்தை பிறக்கறத வேண்டாம்னு தள்ளி போடறாங்க.அப்படி செய்யக்கூடாது.

முதல் குழந்தைய வேண்டாம்னு கலைச்சிட்டா, அதுக்குப்பிறகு அந்த பெண்ணோட உடம்புல ஒரு ஆண்டிபயாடிக் உருவாகி, அடுத்தகரு தங்காம, அதுவே கலைச்சிடும்.

இதனாலதான் முதல் கருவ தடுக்கவே கூடாது. அப்படியே  பிரச்னை இருந்தாகூட இரண்டாவது குழந்தைக்குதான் அது வெளியே தெரியும்.

ஆனா, பெரும்பாலானவங்க..இப்ப பணத்துக்கு ஆசப்பட்டு சரியா பொருத்தம் பாக்காம, ஜோசியத்த ஒரு தொழிலா செய்யறாங்க..அதனாலதான் இப்படியெல்லாம் தப்பு வருது.

தனிமனித வாழ்க்கைய பத்தின எல்லா விவரங்களையும் ஜாதகத்து மூலமா துல்லியமா கண்டுபிடிக்கமுடியும்.

எந்த நோய் வரும்..வந்திருக்கிற நோய்க்கு செலவு செஞ்சு பாத்தா அது தீருமா..இப்படி பல விஷயங்கள ஜோசியம் மூலமா தெரிஞ்சிக்க முடியும்.(இதுவும் விரிவா..பலருக்கு பயன்படும் விதமா இன்னொரு பதிவு ..விரைவில்)

இப்படி தனிமனித வாழ்க்கை பத்தின ஜோதிட கணிப்புகள் செஞ்சிட்டு இருந்த நான் ஒரு கட்டத்துல இயற்கைச்சீற்றங்கள், வானிலை மாற்றங்கள் பத்தியும் ஜோதிடத்தின்மூலமா துல்லியமா கணிக்கமுடியம்ங்கறத என்னோட தொடர் ஆராய்ச்சி மூலமா தெரிஞ்சிகிட்டேன்.

தினமும் குறிப்பிட்ட நேரம் இந்த இயற்கைச்சீற்றங்கள் பத்தின என்னுடைய ஜோதிட ஆராய்ச்சிய செய்துகிட்டு இருக்கேன்.

சிலர் தங்களோட தனிப்பட தேவைகளுக்காகவும் ஜாதகத்தோட என்ன வந்து பாக்கறதுண்டு.

இதுல வெளிய சொல்லமுடியாத சில விவிஐபிக்களும் உண்டு.
பிரச்னைன்னு வர்றவங்களுக்காக, இறையருள் ஜோதிடத்தின் வழியா சில தீர்வுகள என்மூலமா நடத்திட்டு இருக்குன்னுதான் சொல்லணும்..!

....இப்படியாக ராமச்சந்திரனுடனான பேச்சு நீண்டபடியே போனது....,

தன்னை ஒரு Astro Meteorologist ன்னுதான்  இவரு குறிப்பிடராரு...

ஜோதிடம் அப்படிங்கறதயும் தாண்டி..நம்மோட  வேத முறையிலான ஜோதிட கணிப்புகளால ஒருத்தரு முன்கூட்டியே இயற்கை சீற்றங்களப் பத்தி கணிச்சு சொல்றாருங்கறது மட்டுமில்லீங்க....

இதன்மூலமா இயற்கைச் சீற்றங்களால ஏற்படும் உயிரிழப்புகள தடுக்கமுடியும் அப்படிங்கறதுதான்..இவர நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினச்சதோட நோக்கம்..!

உலகம் முழுவதிலுமான உயிர்களின் மீது அக்கறைகொண்ட எல்லாருமே...என்னைப்பொறுத்தவரைக்கும் ஞானிகள்தான்...அவர்கள் ஞானமடையாவிட்டாலும்கூட...,

Friday, August 16

உடலிலிருந்து..பிரபஞ்சவெளிக்கு பயணித்த பரமஹம்சர்..!

சூழ்ந்திருக்கும் பக்தர்கள் கூட்டம்...தன்னை மறந்த நிலையில் பாவ சமாதியில் தன்னைமறந்த ஆனந்த நிலையில் பரவசமாக இருக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்..!

Sri Ramakrishna Paramahamsar


....1886ம் வருடம்

.....................ஆகஸ்ட் 16 இதே நாள்,

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது உடலிலிருந்து விலகி, பிரபஞ்சவெளியில் கலந்தார்..,

அதற்கு முன்புவரை,

ராமகிருஷ்ணர் இன்னைக்கு எந்த ஊர்ல இருக்காரு..

எத்தனை மணிக்குப் போனா அவரை தரிசிக்கமுடியும் 

இப்படி பல கேள்விகள்..விசாரணைகள்..,

ஆன்ம விசாரணை செய்யவேண்டியவன் ஆளைப்பத்தின விசாரணையில் இருக்கானேன்னு ஒவ்வொரு மகானும், இந்த மானுடகுலம் குறித்த அக்கறையோட ஒவ்வொரு கணமும் யோசிச்சிகிட்டேதான் இருக்காங்க.

.....................ஆகஸ்ட் 16 க்குப்பிறகு,

இனி  ராமகிருஷ்ணரைப்பற்றின  உலகார்ந்த..அவரது இருப்பு சார்ந்த கேள்விகளுக்கு இடமில்லை...,

ஆம்..இனி அவர் எங்கும் நிறைந்தவர்..உங்களுக்கு அவரோட பேசவேண்டுமா..

இருந்த இடத்தில இருந்தபடியே கூப்பிடுங்க....அவரோட நீங்க பேச முடியும்...,

அவரை பார்க்கணுமா..கண்மூடி தியானியுங்கள்..அவரே உங்களை நேரில் வந்து தட்டி எழுப்புவார்..,

அவர் கூப்பிட்டு காளியே நேரில் வரும்போது..நாம் கூப்பிட்டு அவர் வரமாட்டாரா என்ன..?

ஒரு மகானின் வருகையும், இந்த பிரபஞ்சவெளியுடன் கலத்தலும் மிகமுக்கியமான தருணங்கள்...

காலமும், வெளியும் ஞானிகளுக்கு கிடையாதுன்னு சொல்லுவாங்க..

அதனாலதான்,127 வருஷங்களுக்கு முன்னால நிகழ்ந்த அப்படி ஒரு முக்கியமான தருணத்துல..

இதோ இங்க நின்னுட்டு இருக்கிறவங்களோட..இத படிச்சிட்டு இருக்கற  நாமும் இப்ப அந்த நேரத்துல,அந்த இடத்துலதான் இருக்கோம்..,

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன்னோட உடலவிட்டு பிரிந்தபிறகும்கூட,அவரோட அறைக்கு அன்னை சாரதாதேவி வழக்கம்போல சாப்பாடு எடுத்துட்டுப்போறது..அந்த அறைக்குள்ள அவரோட பேசிட்டு இருக்கிறதுன்னு வழக்கமான பாவனையிலயே இருந்திருக்காங்க..

அப்பதான் சிலர் அன்னைகிட்ட கேட்டிருக்காங்க,

"...என்ன நீங்க..அவரு போனபிறகும் தனியா இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க.."-ன்னு,

அதுக்கு அன்னை சாரதா தேவி சொன்ன பதில்தான் ரொம்ப முக்கியமானது, 

"..நான் இன்னமும் அவரோடதான் இருக்கேன்..ஆனா,  அவரு உங்களோட பார்வைக்குத் தெரியாம இருக்கலாம்.."னு சொல்லியிருக்காங்க.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரே உடலோடு இருக்கும்போது, அன்னை சாரதா தேவிகிட்ட இப்படி சொல்லியிருக்கிறாராம்,

"...இந்த உடலைவிட்டு பிரிவது என்பது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு போவது போலத்தான், என்னைப் பார்க்க விரும்புபவர்கள் எப்போதும்போல என்னை அடுத்த அறையில் பார்க்கலாம்..."

இது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாக்கு..!

அதனால, முக்கியமான இந்த நாளில் 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை தியானிப்போம்..!

சூட்சுமவெளியில் அவரை தரிசிப்போம்..

இந்த நாளில் அவரது ஆசி பெறுவோம்..வாருங்கள்..!

குருவேசரணம்..!

Tuesday, August 13

சென்னையில இருந்து திருமலைக்கு பாதயாத்திரை!

AnandaNilayam

ஏற்கனவே, எழுதப்பட்ட இந்தப்பதிவ 77வயது பெரியவரின்….7ஆயிரம் கிமீ..பாதயாத்திரை-108 திவ்யதேச தரிசனம்! நிறையபேர் பாத்திருக்காங்க..

நிறையபேர் தங்களுக்குள்ள பகிர்ந்துகிட்டும் இருக்காங்க..

இந்த பயணத்துல நாமும் பங்கெடுத்துக்க முடியும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்..உடலால இல்லன்னாலும்..மனசால அத செய்யமுடியும்..இந்த புனிதயாத்திரைக்கு நம்மால கொடுக்க முடிஞ்ச பணத்தையோ, பொருளையோ கொடுப்பதன் மூலமா..நாமும் இந்த புண்ணிய கைங்கர்யத்துல கலந்துகிட்ட சந்தோஷம் கிடைக்கும்..

இந்த பயணம் முடிஞ்சி திரும்பி வந்து, 108 திவ்ய தேசத்து பிரசாதங்களை  பணம் கொடுத்த ஒவ்வொருவருத்தரோட வீட்டுக்கு கொடுத்தனுப்ப இருக்குறாங்க..

எவ்வளோ பெரிய வாய்ப்பு இது..அதனால..நாம பணம் கொடுக்கறது அவங்களுக்கு செய்யற உதவி இல்லீங்க..நமக்காக அவங்க பிரார்த்தனை செஞ்சிட்டு பிராசாதம் கொண்டுட்டு வறாங்க பாருங்க..அதுதான் அவங்க நமக்கு செய்யுற உதவி..முந்தின பதிவுல இந்த குழுவினருக்கு பணமோ, பொருளோ அனுப்பறது எப்படின்னு விவரங்கள் இருக்கு..ஆர்வம் இருக்கறவங்க இந்த பெருமாள் சேவையில பங்கெடுத்தக்கணும்னு நான் வேண்டி கேட்டுக்கறேன்..
(பாதயாத்திரை குழு செயலாளர் கண்ணன் - 9444854711 )

இன்னைக்கு இந்த பாதயாத்திரை குழுவோட கூட்டம் காரைக்குடியில் நடக்குது. அத முடிச்சிட்டு எல்லாரும் ஸ்ரீரங்கத்துல இருக்குற ஜீயர் சுவாமிகள பாத்து ஆசிவாங்குறாங்க...அடுத்து நாளை பாதயாத்திரை தொடங்குமிடமான கேரளா மாநிலம் திரூர் போய் முதல்நாளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க இருக்கறாங்க.

சோ..இந்த பாதயாத்திரையில பெரும்பாலானவர்களுடைய பங்களிப்பு இருக்கனும்னு நான் எதிர்பார்க்கிறேன்.அதனால, இந்தசெய்திய உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் பகிர்ந்துக்கோங்க..

அடுத்ததா, இந்த 108 திவ்ய தேச பாதயாத்திரையைப்பத்தி படிச்சுட்டு, இதுல துணைப்பிரிவா வருகிற, திருமலை திருப்பதி பாதயாத்திரை பத்தி சிலர் விசாரிச்சிருந்தாங்க.

அவர்களுக்கு சில தகவல்கள்...

வருகிற  29டிசம்பர்2013ல்  இந்த 108 திவ்யதேச குழுவில் உள்ள திரு ராமைய்யா  தலைமையில ஒரு குழு சென்னை புரசைவாக்கத்துல இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை  புறப்படுகிறது.இவங்க 2014 ஆங்கில வருடப்பிறப்புக்கு திருச்சானூர் போயிடுவாங்க..அங்கேயிருந்த 2ம்தேதி காலையில திருமலையில தரிசனம்.இந்தக்குழுவுல கலந்துக்க விரும்பறவங்க கண்ணனிடம் பேசுங்கள்...கண்ணன் மொபைல் 9444854711. 

அடுத்தது சென்னையிலயே மிகப்பெரிய அளவுல, நிறையபேர் கலந்துகிட்டு சென்னையிலிருந்து திருமலை திருப்பதி பாதயாத்திரையா போறதுல பெரம்பூர் ராமானுஜ சபா ரொம்பவே பிரபலம். 

இவங்க அக்டோபர் 19 காலை 6மணிக்கு புறப்படுறாங்க...இவங்கள இந்த எண்ல
தொடர்புகொள்ளுங்கள்..04425515666, 

இதுதவிர மேற்கு மாம்பலத்தில் இருந்தும் ஒரு குழு அக்டோபர் 18 ம்தேதி  அன்னைக்கு திருமலைக்கு புறப்படுகிறது.

அந்த விபரத்தைwww.ttptrust.com என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

108 திவ்யதேச பாதயாத்திரைக்கு நாம ஒவ்வொருத்தரும் பணமோ..பொருளோ கொடுத்து அந்த புனிதயாத்திரையில பங்கெடுத்தக்கணும்னு திரும்பவும் உங்க எல்லாரையும் கேட்டுக்கிறேன்..

ஓம் நமோ வேங்கடேசாய ..

குருவே சரணம்..!

Monday, August 12

திருமாலின் அடுத்த அவதாரம்…சென்னையில்..?


தசாவதாரம்

இதுதான் இன்னைக்கு பேசப்போற தலைப்பு

“….கடவுளின் கரம்பிடித்து, ஞானமெனும் கடற்கரையில் சிறிதுநேரம் உலாவப்போகிறோம்..”இப்படித்தாங்க பேச ஆரம்பிச்சாரு..ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்..,

சென்னை சாலிகிராமத்துல நேத்து(11ம்தேதி ஞாயிறு)  இவரோட ஆசிரமக் கிளை செயல்பட தொடங்கியது. அன்னைக்கு சாயந்திரம் 6மணிக்கு இப்படி ஒரு சத்சங்கத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.

அவரோட பேச்சுல இருந்து அங்கங்க கொஞ்சம் மட்டும், நீங்க சுவைக்கறதுக்காக இங்க கொஞ்சம் தர்றேன்…

(அவரோட பேச்சு ரொம்ப ஆழமானதாக இருந்ததால, அத அப்படியே தரமுடியல..அதனால..அந்த வீடியோவ வெகுசீக்கிரம் இந்த தளத்துல உங்களோட பகிருவேன்..இது ஒரு முன்னோட்டம் மட்டும்தான்..இதுல எதாவது குற்றம்,குறை இருந்தால்..அது என்னால் நிகழ்ந்தவை மட்டுமே..)

“….பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்னு சொல்வாங்க, அது பத்து அல்ல..பற்று..மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…” 

(சமஸ்கிருதுத்துல அந்த 10 பற்றுகளையும் பட்டியலிட்டார்)

அதை உணர்த்துவதுபோல பரிணாம வளர்ச்சியோடு பெருமாள் எடுத்ததுதான் பத்து அவதாரம்…தசாவதாரம்..!

முதல் அவதாரம்…மச்ச அவதாரம்.

ஒருசெல் உயிரிதான் முதல்ல தோன்றின உயிரினம்.அது கடல்லதான் உருவானது.அதுக்கு பயலாஜிக்கலா புரோட்டோசோவான்னு சொல்லுவாங்க.
மீன்..இதுக்கு நீந்த யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை…இந்த அவதாரம் உணர்த்துவது..நீந்துதல்…சர்வைவல்..ஒவ்வொரு மனுஷனும் வாழ்வதற்கு தேவையான விஷயங்கள் அவனுக்குள்ளேயே இருக்குன்னு உணர்த்தறதுதான் இந்த அவதாரம்.

இரண்டாவது..கூர்ம அவதாரம்..ஆமை

சீரான மூச்சு..நிதானம்..இதெல்லாம் தான் ஆமையோட தனித்தன்மை. மூச்சு கட்டுப்பாட்டுக்கு ஆமை மிகச்சிறந்த உதாரணம்.

மூவ் பண்ணுகிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கண்களை மூடியபடியே இருப்பது ஆமையின் வழக்கம்.

ஆழ்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம்…நமது உறுப்புகளில் கண்ணை மட்டும்தான் நம்மால் மூட முடியும்..

இந்த அவதாரம் நமக்கு உணர்த்துவது கண்களை மூடி இருக்கச்சொல்வது.
உள்ளே போய் வெளியே வரும் மூச்சை கவனிக்கச்சொல்வது இந்த அவதாரம்.

(இனி..அடுத்தடுத்த அவதாரம் ஜம்ப் பண்ணி போயிடுவோம்…ரொம்ப விளக்கம் இங்க வேணாம்)

மூனாவது அவதாரம்…வராக அவதாரம்…இதுல ஆழ்ந்து கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும்…அந்த பன்றி ரூபம் தன்னோட மூக்கு நுனியில உலக உருண்டைய தாங்கி பிடிச்சிருக்கற மாதிரி இருக்கும்..

இதோட அடிப்படை என்னன்னா..மூக்கு நுனியை கவனிப்பதன் மூலம் மூச்சை எளிதா கவனிக்கலாம்…எல்லா தியானத்துலயும் சொல்லித்தரும் விஷயம்தான்.

மூச்சை கவனிக்கிறது மூலமா..ஞானமடையலாம்ங்கறதுதான் இந்த அவதாரம் சொல்வது.

அடுத்தது நரசிம்ம அவதாரம்..குழந்தை உள்ளத்தோடு இருந்தால் கூப்பிட்ட உடனே வருவார் என்பதுதான்..

அடுத்தது வாமன அவதாரம்..நீ என் திருவடி தத்துவத்தை புரிந்துகொண்டால் நீ நானாகிறாய் என்பதுதான்

அடுத்த அவதாரம் பரசுராமர்..உடல் வலிமை உலகத்தை ஆளுதலை உணர்த்துவது.

அடுத்தது ராமர்..வாழ்வின் லட்சியம் ..ஞானமடைதல்

கிருஷ்ணர்…நான் இறை அனுபூதி..என்னை நீ அனுமதி

பலராமர்..விவசாயத்தை விட்டுவிடாதே என்பதை உணர்த்துவது.

இனி வரும்காலத்தில் கட்டியிருக்கும் வீடுகளை இடித்துவிட்டு விவசாயம் செய்யும் நிலை வரப்போகிறது.

பத்தாவது அவதாரம்..தசாவதாரம்..இனிதான் வரப்போவதாக சொல்லியிருக்கும் அந்த அவதாரம்..கல்கி

அது எந்த ஊரில் நடக்கும் எனச்சொல்லியிருக்கும் குறிப்புகளிலிருந்து யூகிக்கலாம்..

செம்மையான நெய் தரும் பசுமாடுகள் நிறைந்த ஊர்…மூணுபக்கமும் கடல் சூழ்ந்த ஊர்…அந்த ஊருக்கு கீழே ரத்தகளறி நடக்கும்.. அந்த ஊரில் வலம்புரி சங்கு விளையும்…இப்படி சொல்லப்பட்டிருக்கு.

இப்போ …சென்னை என்ற பெயரோட விளக்கத்த வேற என்னன்னவோ சொல்றாங்க..அது அப்படியில்ல..சென்னை என்பது செம்மையான நெய் தரும் பசுமாடுகள் நிறைந்த ஊர் என்பதைத்தான் சென்னை என குறிப்பிடப்பட்டிருக்கு.

அடுத்ததா…மூணுபக்கமும் கடல்..சென்னையில இருக்கு…

அடுத்து..ரத்தகளறி..இலங்கையில நடந்தது

இங்கு வலம்புரி சங்கு விளையும்…சென்னையில BAY OF BENGAL கடல் பகுதியிலதான் ஏராளமான வலம்புரி சங்குகள் விளைகின்றது.
…அப்படியானால்…கல்கி அவதாரம் …சென்னையிலதான்…

(இப்படியாக ஒரு இரண்டரை மணி நேரம்..ஏராளமான அரிய தகவல்கள்..ராமாயணம்..மகாபாரதம்..கர்ணன் நல்லவனல்ல..வில்லன்..இப்படி நிறைய விளக்கங்கள் சரளமா வந்து விழந்தபடியே இருந்தது. அதுமட்டுமில்லாம ..இவரு சமஸ்கிருத மந்திரங்கள சொல்லும்போது..அது ஒரு தனி அழகோடயும், கம்பீரத்தோடயும் இருந்தது.)

உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுவேன் என்பது  வார்த்தையல்ல..எனது வாக்குறுதி..

இப்படி ஒரு வாசகத்த உங்க போஸ்டர்ல..பத்திரிகையில் போட்டிருக்கிறீங்களே..எப்படி எங்க வாழ்க்கைய புரட்டிப்போடுவீங்கன்னு எல்லாரும் கேக்கறாங்க..நாளையிலிருந்து பாருங்க…

என்றபடி சொற்பொழிவை நிறைவு செய்தார்.

சென்னையில் முதல்நாள்…முதல் நிகழ்ச்சிக்கே நல்ல கூட்டம் வந்து இவரது பேச்சை மிகவும் அனுபவிச்சு கேட்டாங்க.

நிகழ்ச்சி முடிஞ்சதும்,விழா குழுவினர்..வந்திருந்த எல்லாரையும் சாப்பிட்டுட்டு போகும்படி சொல்லிட்டே இருந்தாங்க.

அப்ப  ஒரு வயதான அம்மா சொன்னதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு என்ட் பஞ்ச்

“..அட போங்க…இவ்வளவு நேரம் காதல கேட்டதே வயறும் மனசும் நிறைஞ்சுகிடக்கு..சாப்பாடெல்லாம் தேவையே இல்ல…”

Sunday, August 11

உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வார்த்தையல்ல..எனது வாக்குறுதி…

இப்படி ஒரு வாசகத்தோட ஒரு இளம் துறவியோட படம்..,


Sri Vijayakumara Swamigal

சமீபத்துல அடிக்கடி இந்த போஸ்டர் சென்னையில பல இடங்கள்ல கண்ல பட யாரிவர்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்தது.

அதுக்கு தகுந்த மாதிரியே..இன்னைக்கு பத்திரிகை விளம்பரமா வீட்டுக்குள்ளேயேயும் வந்துட்டாரு.

இன்னைக்கு(11ஆகஸ்ட்2013) சாயந்திரம் 5 மணிக்கு சாலிகிராமத்துல ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகளோட ஆஸ்ரமத்துல ஒரு ஆன்மீக சொற்பொழிவு.

அதோட தலைப்பு..தசாவதாரம்..,

உடனே, சாமிக்கு  போன் போட்டு பேசினேன்…சொற்பொழிவுக்கு முன்னால சாமிய சந்திக்கமுடியுமா..?

11மணிக்கு வரச்சொல்லி உத்தரவாக, சரியாக அங்கு ஆஜரானேன்.

சாலிகிராமத்துல இந்த ஆசிரமக்கிளை இன்னைக்குதான் தொடங்கப்படுகிறது.
ஆசிரமத்துல அப்பதான் புதுசா குடிவருவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகிட்டு இருந்தது.

நான் போன சமயம் சாமி இன்னும் அங்க வரல.

சற்று நேரத்தில் அங்கு ஒரு கார் வர, அதிலிருந்து சிலர் இறங்கினார்கள்.
அதிலிருந்து ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார்.

அவர்தான் விஜயகுமார சுவாமிகளின் தந்தை, “..எங்க சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் என்னோட மூத்த மகன். நான் விசிறி சாமியோட பக்தன்(யோகிராம் சுரத்குமார்).

ஆசிரியரா வேலை பாத்துட்டு இருந்தப்பதான் ஒருசமயம் பேப்பர் வேல்யேஷன்க்காக திருவண்ணாமலை போயிருந்தேன். அப்பதான் சன்னதிதெருவுல விசிறி சாமியார பார்த்தேன்.

இதுவரைக்கும் ஒரு நாலு தரம் அவரபார்த்து ஆசி வாங்கியிருக்கேன். முதல்முறை போனப்பவே என்கிட்ட நல்லா சிரிச்சு பேசினார். அப்பவே அங்க இருக்கறவங்க எல்லாம் ஆச்சரியப்பட்டாங்க. 

அடுத்தமுறை நான் போனப்ப சிங்கப்பூர்ல இருந்த என்னோட கடைசிமகனுக்கு அடிப்பட்டிருந்தது. அப்ப, என்ன பாத்த சுவாமிஜி உன்னோட கடைசிபையன் பேர் என்ன அப்படின்னு விசாரிச்சாரு. 

நான் ராம்குமார் சொல்ல அவரு குலுங்கி குலுங்க சிரிச்சாரு. ஏன்னா அவரோட பேரும் அதுதான்னு எனக்கு அப்புறமாதான் தெரிஞ்சது. அப்புறம் எனக்கு கல்கண்டு பிரசாதம் கொடுத்தாரு. அத நான் வீட்டுக்கு கொண்டுவந்து மறுநாள் காலையில என்னோட மகனுக்கு கொடுக்கலாம்னு எடுத்தப்போ கல்கண்டு துண்டு கற்பூரம் மாதிரி மாறியிருந்தது. எனக்கு ஆச்சரியமாயிட்டது. 

அத கொடுத்தபிறகு என்னோட மகனுக்கு குணமாயிடுச்சு. ..” 

அவரு சொல்லிகிட்டு இருக்கும்போதே ஒரு கார் வர, அதலயிருந்து இறங்கி வந்தவரு..காவியுடையில இருந்ததால..இவர்தான் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகளோன்னு நான் யோசிக்க…ஆமா..அவரோட அப்பாவே என்னை அவர்கிட்ட அறிமுகம் செய்துவைச்சாரு.

ஸ்வாமிகள் என்ன உள்ளே அவரோட வரச்சொல்லி அழைச்சிகிட்டு போனாரு.
ஐடியில் வேலை செய்ற இளைஞனைப்போலதான் இருக்காரு. ரொம்பவே சாதாரணமாத்தான் எல்லார்கிட்டயும் பழகுறாரு.

பரஸ்பரம் அறிமுகம் முடிந்து…அவரைப்பற்றி கேட்டபோது…

"...சொந்த ஊர் தஞ்சாவூர், பிஇ சிவில் முடிச்சிட்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி நடத்திட்டு இருந்தேன். 2000 வரைக்கும் எல்&டியில தான் வேலை அதனால சென்னையிலதான் தங்கி இருந்தேன்.

அதுக்கப்பிறகுதான் 2004 ல சன்யாசம். குறிப்பட்ட சிலவற்றை 
யோகிராம் சுரத்குமார் சொல்லிக்கொடுத்தார். வேறு சிலதை நான் பயிற்சி எடுத்தேன். 

கடலூர்லதான் ஒரு ஆசிரமம் வச்சு நடத்திட்டு இருக்கேன். ஆனா, சென்னையில இருக்குற பக்தர்கள்  கூப்பிட்டதால இங்க ஒரு கிளை திறந்திருக்கேன்.

இன்னைக்கு இங்க ஆசிரமம் தொடங்கினதை முன்னிட்டு ஒரு சத்சங்கம் எற்பாடு செஞ்சிருக்கோம்.

தசாவதாரம் என்பது தலைப்பு. இது என்னன்னா, ஒவ்வொரு காலகட்டத்துலயும் என்ன தேவை இருந்ததோ அதை நிறைவேத்தற மாதிரிதான் ஒவ்வொரு அவதாரத்தோட நோக்கமும் இருந்திருக்கு. அதாவது ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கிற தொடர்புகள இந்த சத்சங்கத்துல விளக்கப்போறேன்.

அதுமட்டுமில்லாம இன்னைக்கு சத்சங்க கூட்டத்துல ஒரு அரிய, அற்புதமான பொருளை பக்தர்களோட தரிசனத்துக்கு வைக்கப்போறோம்.
அப்படின்னு சொல்லிட்டே தங்க கவசம் அணிந்த ஒரு பொருளை காட்டினார். அது பெரிய அளவிலான வலம்புரி சங்கு.இது  புராதனமானது, பலநூறு வருஷ பாரம்பரியம் கொண்டது. 

ஒவ்வொரு மாசமும் திருமலை திருப்பதிக்கு இத எடுத்துட்டு போயி சுவாமிக்கு அபிஷேகம் செய்திட்டு இருந்தாங்க. ஒருகட்டத்துல அது தடைபட்டு போனதால, இப்போ இந்த சங்கு இங்க வந்திருக்கு.

விஷ்ணு, “..என்னை சங்காகவும், சக்கரமாகவும் காணலாம், சங்காக இவ்வுலகிலும், சக்கரமாக அவ்வுலகிலும்…” அப்படின்னு சொல்லியிருக்கார்.
அதனால பாரம்பரியமும் விசேஷ அம்சமும் கொண்ட இந்த சங்கை தரிசனம் செய்யறதே விஷ்ணு தரிசனம்தான்…


அதுமட்டுமில்லீங்க..இது ஆசிரமம் கிடையாது..பெண்களுக்கு அவங்களோட தாய்வீடு.,ஆண்களுக்கு அவர்களது மனதிற்குள் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு ஒர்க்ஷாப். 

நம்ம ஆசிரமத்துல யோக மூலமா ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பலவிதமான ஆச்சரியமா மாற்றங்கள ஏற்படுத்தக்கூடிய சில புது டெக்னிக்ஸ் உருவாக்கியிருக்கோம்.

 அதுக்குப்பேரு ‘மோட்சக்ரியா’  இந்த மோட்சக்ரியா வகுப்புகள் வெகு சீக்கரமே  தொடங்க இருக்கோம்.

அதுமட்டுமில்லாம அதர்வண வேதத்த நான் முறைய படிச்சிருக்கேன். அத மக்களுக்கு பயன்படுத்தும் விதமா, வரவிருக்கிற அமாவசையில இருந்து இங்கு அமாவாசை அதர்வண ஹோமம் நடத்த இருக்கிறோம். 

இந்த ஹோமத்துக்கு பலவிதமான தனிச்சிறப்புகளும், நன்மைகளும் இருக்கு. இந்த ஹோமத்திற்கு வர்றவங்க கையில வரமிளகாய் எடுத்துட்டு வரனும்." என்றார் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்.

போஸ்டர்ல இருந்த  வாசகம் ஏனோ திரும்பவும் நினைவுக்கு வந்தது...

...உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வார்த்தையல்ல..எனது வாக்குறுதி..

மந்தகாசமாய் புன்னகைத்தபடி விடைகொடுத்தார்  ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்.
LR EXPORTS  உரிமையாளர் L ராஜேந்திரன் என்பவர்தான் ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள் இங்க வரனும்னு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்காரு.இன்னைக்கு இந்த சத்சங்க ஏற்பாடுகளையும் கூட சுத்திசுத்தி செஞ்சிட்டு இருந்தாரு.

ஏற்கனவே, சிந்தாதிரிப்பேட்டையில ஆசிரமக்கிளை 8ம்தேதியே ஒரு சம்பிரதாயத்துக்காக திறந்தாச்சாம். ஆனா, அங்க எல்லா பக்தர்களுக்கும் போக்குவரத்துக்கு வசதியில்லாததால ஆசிரமம் முறைப்படி இன்றிலிருந்து (11 ஆகஸ்ட் 2013) இங்கு சாலிகிராமத்தில் செயல்படும்னு சொல்லியிருக்காங்க.

8ம்தேதி சிந்தாதிரிப்பேட்டையில நடந்த ஆசிரம தொடக்கவிழா பூஜை பற்றின ஒரு வீடியோவில ஸ்ரீவிஜயகுமார சுவாமிகளோட பேட்டியும் இருக்கு(வீடியோ குவாலிட்டி சுமார்தான்) அதயும் இந்த இணைப்புல பாருங்க.

VIJAYAKUMARA SWAMIGAL ASHRAMAM OPENED AT CHINTATHIRIPET

இந்த விழா பத்திரிகையில் இருந்த இன்னுமொரு வாசகமும் நம்மை வெகுவாக கவர்ந்தது.


'...யார் கடவுளை காண விரும்புகிறார்களோ..!
அவர்களை கடவுளும் காண விரும்புகிறார்..!!'-ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்

இவரு கொஞ்சம் வித்யாசமான ஆளுதாங்க..இன்னைக்கு சாயந்திரம் நடக்குற சத்சங்கத்துக்கு வந்துதான் பாருங்களேன்.

ஆசிரமத்தின் முகவரி

ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்
எண் 23, பெரியார் தெரு, காந்திநகர்
சாலிகிராமம்
வடபழனி,
சென்ன-93
(பிரசாத் லேப் (பிரசாத் ஸ்டுடியோ அல்ல)பக்கத்துல போய் இந்த விலாசத்த விசாரிங்க)