Tuesday, February 18

இன்று திருப்பதிக்கு விருது..!

திருப்பதியின் வசீகரம்..!
இரண்டாயிரமாண்டு பழமையான திருவேங்கடமுடையான் திருக்கோயில்..,

அவரை தரிசிக்க படையெடுக்கும் கோடானுகோடி பக்தர்கள்..,

திருமலையை தாங்கி நிற்கும் திருப்பதி..!

2012-13 ம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து வேங்கடவனை தரிசிக்க வந்த பக்தர்களின் எண்ணிக்கை 2 கோடி..!

காணிக்கையாக பெருமாளுக்கு வந்த ஆண்டு வருமானமோ ரூ.2250 கோடி ..!

இப்படி பழம்பெருமை வாய்ந்த திருமலை திருப்பதிக்கு விருது கொடுத்து தன்னை பெருமைபடுத்திக்கொள்கிறது மத்திய அரசு..,

Best Heritage City  எனும் தேசிய சுற்றுலா விருதினை இன்று திருப்பதி நகருக்கு மத்திய அரசு வழங்குகிறது.

உலகின் சக்தி மையம்..பிரபஞ்சநாயகன் வாசம் செய்யும் திருத்தலம்..கோடானுகோடி தேவர்களும், ரிஷிகளும்,முனிகளும் தவமிருக்கும் புண்ணியதலத்திற்கு மானுடகுலம் விருது கொடுத்து மகிழ்வதுவும் கூட ஒரு தனிச்சிறப்புதானே..!

தேவஸ்தான அதிகாரி டில்லியில் விருது பெறும் காட்சி..!

ஓம் நமோ வேங்கடேசாய..!

Monday, February 10

இன்றும் முருகர் தவம் செய்துகொண்டிருக்கும் இடம்.! பிப்ரவரி 14 பௌர்ணமி அன்று எல்லோரும் தரிசிக்கலாம்..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 09

(2014ஜனவரி 25 அன்று தந்தி டிவியில் ஒளிபரப்பான பகுதியிலிருந்து)

முருகனுக்கும், பெருமாளுக்கும் என்ன தொடர்பு, முருகன் எப்போ திருமலைக்கு வந்தாரு..இப்படி நமக்கும் நிறைய கேள்விகள் இருந்தது. அதே மாதிரி நிறையபேர் கேள்வி கேட்டிருந்ததால, அதையெல்லாம், இந்த நிகழ்ச்சியில பதில் சொல்லிட்டு இருக்குற திருப்பதி கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் முன்னால வச்சோம்..அதுக்கு அவர் சொன்ன பதில்தான் இந்த பதிவு,



"திருமலையில் பாபவிநாசத்துக்கு அருகில் இருக்கும் குமாரதாரிகா தீர்த்தம் பற்றி சொல்லும்போது, அங்கு முருகர் தவத்தில் இருப்பார் என்று சொல்லியிருந்தேன்

அதைப்பற்றி சில கேள்விகள் வந்திருக்கின்றன

பக்தர்களின் சந்தேகங்களைத் தீர்க்க இப்போழுது நான் சில விவரங்களை கூற விரும்புகிறேன்.

'குமாரதாரீகா வாசஸ் கந்தா வைசஸ் பிரதாய.. 'என்று அஷ்டோத்ர சதநாமாவளியில் வருகிறது.

தாரகாசுர சம்ஹாரத்தின்போது, சக்தியை வேண்டி முருகப்பெருமான் இந்த குமாரதார என்ற தீர்த்த ஸ்தலத்தில் மஹாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்ததாகவும்

மஹாவிஷ்ணு அவருக்கு பிரத்யட்சமாக வந்து தாராகசூரனை சம்ஹரிக்க சக்தி கொடுத்ததாகவும்ஸ்கந்த புராணத்தில் வருகிறது.

அதற்குப்பிறகு முருகன் தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அந்த பாவத்தை நீக்க மறுபடியும், குமாரதாரா தீர்த்தத்தில் தவமிருந்து தினமும் திருவேங்கடமுடையானை சேவித்து, அவருக்கு தங்க கிரீடத்தை பரிசளித்ததாகவும், சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் பரமசிவனும் அங்குவந்து முருகனை ஆசீர்வதித்ததாகவும, திருவேங்கடமுடையான் பரமசிவனிடம் முருகனைப்போன்ற பிள்ளையைப் பெற்றதற்கு பாராட்டியதாகவும் மிகவும் அழகான சொற்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


கலியுகம் முடியும் வரை முருகனால் போற்றப்பட்ட திருவேங்கடமுடையான் என்றுகூட சொல்லப்பட்டிருக்கிறது

முருகனுக்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள தொடர்பு பற்றி  வேங்கடாசல மஹத்மியத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது"  என்று விளக்கம் அளித்தார் டாக்டர் ரமண தீட்சிதர் 

இன்னைக்கும் முருகர் தவம் செஞ்சிட்டு இருக்கறதா சொல்லப்படும் இடம்தான் குமாரதாரா தீர்த்தம், 
குமாரதாரா தீர்த்தம் (இதன் அருகில்தான் முருகர் தவம் செய்யும் இடமும், சிலைகளும் உள்ளன)

தினமும் இந்த தீர்த்தத்துல இருந்து முருகர் திருப்பதி ஸ்ரீ திருவேங்கடமுடையானை வந்து தரிசனம் செஞ்சிட்டு போறதா நம்ப ப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த குமாரதாரா  தீர்த்தம் பக்தரிகளின் வசதிக்காக வருடத்தில் ஒரேமுறை மட்டுமே திறந்து விடப்படுகிறது.
குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லும் வழி

குமாரதாரா தீர்த்தத்திற்கு செல்லும் வழி

பாபவிநாசனம் தீர்த்தத்திலிருந்து சிறிதுதூரம் காட்டுப்பாதையில் நடந்துசென்று இந்த தீர்த்தத்தை தரிசிக்கலாம். 
மலையிலிருந்து கீழிறங்க உதவும் இரும்பு படிக்கட்டுகள்

இரும்பு படிக்கட்டுகளை பார்வையிடும் தேவஸ்தான ஊழியர்கள்

இந்த மாசி பௌர்ணமி அன்று இங்க உலகில் உள்ள முக்கோடி தீர்த்தங்களும் வந்து கலப்பதாக ஐதீகம். அந்த தினத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து அதிகாரிகளும், அர்ச்சகர்களும் குமாரதார தீர்த்தம் சென்று பூஜைகள் நடத்தி பிரசாத விநியோகம் செய்து வருவது வழக்கம். 

மலைகள் சூழ்ந்த  குமாரதாரா தீர்த்தம் 

மலைகள் சூழ்ந்த குமாரதாரா தீர்த்தம்
(இங்குதான் முருகன் தவம் செய்யும் இடம் உள்ளது)
முடிந்தவர்கள் வருகிற பிப்ரவரி 14 பௌர்ணமி அன்று, திருமலைக்கு போய் குமாரதாரா தீர்த்தத்தில் நீராடி, ஒரே நேரத்தில் முருகப்பெருமானின் அருளையும், திருவேங்கடமுடையானின் அருளையும் பெற்று  சகல சௌபாக்யங்களுடனும், ஐஸ்வர்யங்களுடனும்  வாழ, எல்லாம் வல்ல திருவேங்கடமுடையானை பிரார்த்திக்கிறேன்..ஓம் நமோ வேங்கடேசாய..! 

திருமலையில் சாமியை தரிசிக்கும் முறை எது ? சொல்லித்தருகிறார் கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர்


திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - 07

( தந்தி டிவியில் 2014 ஜனவரி -19ம்தேதி ஒளிபரப்பான பகுதியிலிருந்து )

ஓம் நமோ வேங்கடேசாய..!


திருமலை திருப்பதி  கோயிலின்  பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்லும் யாத்திரா கிரம ம் பற்றி கேளுங்கள் ,

"திருவேங்கடமுடையான் தரிசனத்திற்காக திருப்பதிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு இங்கு தரிசனம் செய்யவேண்டிய முறை யாத்ராகிரமம் பற்றி சொல்ல விரும்புகிறேன்.

வேங்கடாசல மஹத்மியம் எனும் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் யாத்ரா கிரமம் என்னவென்றால்,

 'சுவாமி புஷ்கரணி ஸ்நானம்,வராஹ வேங்கட தரிசனம்,மஹாபிராசாத சுவீகாரம் த்ரையம் த்ரைலோக துர்லபம்...'

மிகவும் புனிதமான சுவாமி புஷ்கரணியில் முதலில் நீராட வேண்டும்.

அதற்கு முன்பு, சுவாமிக்கு செலுத்தவேண்டிய காணிக்கை இருந்தால் தலைமுடி காணிக்கையாக செலுத்தி, சுவாமி புஷ்கரணியில் புனித நீராடிய பிறகு,

புஷ்கரணி தீரத்தில் இருக்கும் ஆதிவராஹ சுவாமியை தரிசிக்க வேண்டும்.

இந்த திருமலை ஷேத்திரத்திற்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்று பெயர்.

ஷேத்திராதிபதியாக வராஹ சுவாமி இருப்பார்

மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவதாக வரும் வராஹ அவதாரத்தின்போது, சுவாமி இரண்யாட்கன் என்ற அரக்கனிடமிருந்து பூதேவியை காப்பாற்றி கடலிலிருந்து உத்தரித்த பூவராஹ சுவாமியாக பூதேவியுடன் சுவாமி புஷ்கரணி தீரத்தில் எழுந்தருளியிருக்கிறார்

திருவேங்கடமுடையான் வைகுண்டத்திலிருந்து அவதரித்து கலியுகாந்தம் பக்தர்களுக்காக இங்கு இருக்க விரும்பி,இது ஆதிவராஹ ஷேத்திரமாகையால், வராஹ சுவாமியிடம் இருக்க இடம் கேட்டு வந்ததாகவும், சுவாமி புஷ்கரணிக்கு தென்மேற்கு திசையில் வராஹ சுவாமி  மஹாவிஷ்ணுவிற்கு இடம் கொடுத்ததாகவும், இப்பொழுது சுவாமி எழுந்தருளியிருக்கும் இடம்தான் அது என்றும் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வராஹ சுவாமி மஹாவிஷ்ணுவிற்கு இடம் கொடுத்ததற்கு பதிலாக,வராஹ சுவாமிக்கு முதல் ஆராதனம்,முதல் நிவேதனம் முதல் தரிசனமும் மஹாவிஷ்ணு அளித்திருக்கிறார்.

ஆகையால் பக்தர்கள் சுவாமி புஷ்கரணியில் ஸ்நானமாடி,வராஹ சுவாமியை தரிசித்து, பிறகு, திருவேங்கடமுடையானை தரிசித்து, சுவாமியினுடைய மஹாபிரசாதத்தை சுவீகரித்து திரும்பி செல்ல வேண்டியதே சரியான யாத்ரா கிரமமாக சொல்லப்பட்டிருக்கிறது.

திருமலைக்கு வருகைதரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் இந்த யாத்ரா கிரமத்தை சரியாக அனுசரித்து முதலில் வராஹசுவாமியை தரிசித்தபிறகு திருவேங்கடமுடையானை தரிசித்து முழுபலனை பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

என்று சொல்கிறார் டாக்டர் ரமண தீட்சிதர்

இதோ அவர் பேசிய வீடியோபதிவு

Sunday, February 9

திருமலையில் சுவாமிக்கு அபிஷேகம் எப்படி செய்கிறார்கள்..சொல்கிறார் கோயில் அர்ச்சகர் ரமண தீட்சிதர்

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 06

 (ஜனவரி 18 அன்று தந்தி டிவியில் ஒளிபரப்பான பகுதியில் இருந்து )

இந்த நிகழ்ச்சிக்கு சில பக்தர்களோட கேள்விகள் வந்திருந்தன. அதுல சிலர் அபிஷேகம் எப்படி செய்யப்படுதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா கேட்டிருந்தாங்க.அதனால, இந்த நிகழ்ச்சிமூலமா, திருமலை திருப்பதி கோயில்ல மூலவருக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுதுன்னு விவரமா சொல்லியிருக்காரு கோயிலின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர்
திருமலை திருப்பதி அபிஷேகம்

"...திருவேங்கடமுடையான் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவர் விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.

சுமார் ஒன்பதரை அடிகள் உயரம் கொண்ட இந்த மூலவர் சாளக்கிராமத்தால் செய்யப்பட்ட சிலை. சிற்பிகள் செய்யாத சுயம்பு வடிவமாக தானே உருவாகியது.

வைகுண்டத்தில் இருந்து மஹாவிஷ்ணு அர்ச்சாவதரா சொரூபமாக அவதரித்த திருவுருவம் இந்த மூலபிம்பம்

இந்த மூலவருக்கு வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம் நடக்கிறது. அபிஷகத்திற்கு முன்னால், சுவாமி அணிந்திருக்கும் பட்டு பீதாபரங்கள் பட்டு உத்தரீயம் முதலியவை அகற்றிவிட்டு ஏகாந்தமாக அவருக்கு கௌபீனம் அலங்கரித்து சுவாமியினுடைய திருமேனிக்கு புனுகுதைலம் தடவி அபிஷேகம் ஆரம்பமாகிறது

வேதபண்டிதர்கள், பக்த சூக்தங்களை பாராயணம் பண்ணிக்கொண்டிருக்க,சுத்தமான தண்ணீருடன் அபிஷேகம் ஆரம்பமாகிறது.

பிறகு, பசும்பாலுடன் அபிஷேகம் நடக்கிறது. சுவாமியினுடைய திருவுருவம் சாளக்கிராம சிலையானதால், இவருக்கு பசும்பால் மட்டும்தான் அபிஷேக திரவியமாக உபயோகபடுத்தப்படுகிறது

திருமலை திருப்பதி அபிஷேகம்

மற்ற விக்ரகங்களுக்கு நடத்தும் தயிர், தேன், இளநீர் முதலிய திரவியங்கள் உபயோகப்படுத்தமாட்டாது

பசும்பால் அபிஷேகம் முடிந்த பிறகு, திரும்ப சுத்தோதக ஸ்நானம், சுவாமியினுடைய திருமேனி பாலின் பிசுபிசுப்பு அகற்றுவதற்கு பரிமளம் எனும் சுகந்த திரவியம், சந்தனம், குங்கும்பபூ, பச்சகற்பூரம் முதலியவை சேர்ந்த பரிமளம் என்ற திரவியத்துடன் சுவாமியினுடைய திருமேனியை மத்தனம் செய்து பிறகு, சுத்தோதக ஸ்நானம் செய்யப்படுகிறது.

இதேசமயத்தில் திருவேங்கடமுடையானின் மார்பில் வலதுபக்கத்தில் இருக்கும் வியூகலட்சுமி என்ற மிகவும் விசேஷமான சக்திவாய்ந்த மகாலட்சுமி உருவத்திற்கு மஞ்சள்காப்புடன் திருமஞ்சனம் நடக்கிறது

இந்த பரிமளம் சுத்தோதகம் சேர்ந்த தீர்த்தம்தான் அபிஷேகஜலமாக பக்தர்களுக்கு பிறகு, விநியோகிக்கப்படுகிறது.

அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு ஏகாந்தமாக அலங்காரம் நடக்கிறது சுவாமியின் திருமேனியில் இருக்கும் ஈரத்தை தோத வஸ்திரத்தினால் ஒத்தி எடுத்து,24 முழம் நீளம் கொண்ட புதிய வேஷ்டி 12முழ நீளம் கொண்ட பட்டு உத்தரீயம் முதலியவற்றை சுவாமிக்கு அனிவித்து, சுவாமியின் சிரசில் சிறுவா வஸ்திரம் அமைத்து, சுவாமியின் முகபிம்பத்தில் பச்சகற்பூரம் நீர்க்காப்பாக, மெலிதாக அலங்கரித்து, சுவாமியின் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது 

இந்த சமயத்தில் திருவேங்கடமுடையான் திருமேனியில் நாகபரணம், ஒட்டியாணம் இருக்கும்,ஸ்ரீவத்சம்,கௌஸ்துபம் என்ற மஹாவிஷ்ணுவுக்கே உரிதான அணிகலன்கள் சுவாமியின் மார்பில் அலங்கரிக்கபடுகிறது

இது நிஜபாத தரிசனம் என்று பெயர்

சுவாமியின் பாதகமலங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றன. சுவாமியின் நிஜபாதங்கள் மற்ற நேரங்களில் தங்க கவசங்களினாலும், அர்ச்சனை செய்த துளசிதளங்களினாலும் மறைக்கப்படுகின்றன. இது நிஜபாத தரிசனம்.

நிஜபாத தரிசனம் முடிந்த பிறகு, சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. இது சமர்ப்பணா என்று சொல்லுவார்கள் இது ஏகாந்தமாக நடக்கும். கதவு சாத்தப்பட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும்தான் கர்ப்பாலயத்தில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

முதலில் சுவாமியின் முகத்தில் பச்சகற்பூரத்தை திருநாம்மாக அணிவித்து,அதன் நடுவில் கருப்பு நிறமான கஸ்தூரி திலகம் மூங்கில் இலைபோன்ற வடிவத்தில் அமைத்து, பிறகு, சுவாமியின் முகத்தில் புனுகு தைலம் லேபனம் செய்து புதிய பட்டு வேஷ்டி உத்தரீயங்களை அணிவித்தபிறகு சுவாமியின் திருவாபரணங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணிவிக்கப்படுகின்றது

கடைசியாக கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு சுவாமியின் திருமார்பில் இருக்கும் தங்கலட்சுமி உருவத்துக்கு குலசேகரப்படியின் உள் பக்கம் ஏகாந்தமாக திருமஞ்சனம் நடத்தி, தாயாருக்கு பட்டுவஸ்திரம் அணிவித்து ஸ்வாமியின் திருமார்பில் அலங்கரிக்கப்பட்ட பிறகு, ஸ்வாமிக்கு நவநீதம் அம்சையாகிறது. பிறகு, பச்சகற்பூர ஆரத்தி நடக்கிறது. இதன்பிறகு தோமாலை சேவை ஆரம்பாகும்.

இது அபிஷேக நிகழ்ச்சி ..!

இந்தபதிவில் சொல்லப்பட்டிருக்கும் வீடியோ இணைப்பு இதோ..!

திருமலையில்தான் எத்தனை எத்தனை தீர்த்தங்கள்..?

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 05 

(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி யன்று தந்தி டிவியில் ஒளிபரப்பானது)

டாக்டர் ரமண தீட்சிதர் சொல்கிறார் 

"..இன்று வைகுண்ட துவாதசி.

புண்ணியதினமான வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் என்றும், இன்று கூட(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி) வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படுகிறது

இன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.

திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம்இன்று கர்ப்பாலயத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்கு சக்கரஸ்நானம் என்று பெயர்.

திருமலை திருப்பதி சுவாமி புஷ்கரணி

இந்த சுவாமி புஷ்கரணி என்பது இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும்,

வைகுண்ட துவாதசி அன்று பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை புண்ணிய ந்திகளில் இருந்தும் புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும் சக்தி வந்து இந்த சுவாமி புஷ்கரணியில் கலக்கும் என்றும்

இதற்கு சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி என்று பெயரிட்டு அன்று சக்கரஸ்நானம் நடைபெறுகிறது

இந்த சக்கரஸ்நானத்தின்போது ,சுவாமி புஷ்கரணியில் குளிக்கும் பக்தர்களுக்கு,எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், சாமியின் அருள் கிட்டும் என்பதும்  சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை.  

சுவாமி புஷ்கரணி என்பது,மிகவும் பவித்ரமானது.பார்க்கும்பொழுதே, அல்லது அந்த தீர்த்தத்தை புரோட்சனை செய்துகொள்ளும்போதே பாவங்களை அழிக்கக்கூடிய புண்ணிய தீர்த்தம் என்று சொல்லப்பட்டது.

தர்சன,பர்சன,மாத்ரேன என்று சொல்லப்பட்ட புனிதமான புஷ்கரணியில் இன்று சக்கரஸ்தானம்(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி) நடைபெறுகிறது

பக்தர்கள் சக்கரஸ்நானத்தின் பொழுது ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி,சுவாமியின் அருளால் பாவங்களை நீக்கி புண்ணியங்களைப்பெறுவதற்கு இது மிகவும் விசேஷமான ஒரு வாய்ப்பு.

திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத்தொடரில் மிகவும் புனிதமான ஆறுகோடி தீர்த்தங்கள் இருப்பதாக,சொல்லப்பட்டிருக்கிறது


இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சிலது, மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கறது.

இதில் முக்கியமானது, ஆகாசகங்கா, பாபவிநாசனம், ஜாபாலி தீர்த்தம், கோகர்ப தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம், சனகசனந்தன தீர்த்தம், சக்கர தீர்த்தம்,முதலியவை

இந்த  தீர்த்தங்களை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக சென்று பார்க்கலாம்.

ஆகாசகங்கா தீர்த்தத்திலிருந்துதான்,திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தீர்த்தம் தினமும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அப்பால், பாபவிநாசன தீர்த்தம் இருக்கிறது.

கோகர்ப தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் என்று கூட அழைக்கப்படுகிறது.

குமாரதார தீர்த்தம் என்ற புனித தீர்த்ததில் சுப்ரமணிய சுவாமி முருகன்,நிரந்தரம் தவத்தில் இருப்பார் என்றும்,தினமும் கர்ப்பாலயத்தில் வந்து சுவாமியை தரிசிப்பார் என்றும், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதே விதமாக தும்புரு தீர்த்தத்தில், நாரதர், தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும்,

தும்புரு தீர்த்த த்தில் இருக்கும் தும்புரு தேவரிஷியின் சிலை
தும்புரு தீர்த்தம்

இந்திந்த தீரத்தங்களில் ஒரு ஒரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி, சுவாமியை தரிசித்து செல்வார்கள் என்றும் அவர்களுடைய பாத சுவடுகள்கூட சிலர் பார்த்திருப்பதாக பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்

அப்படிப்பட்ட புனிதமான தீர்த்தங்கள் மலையில் எத்தனையோ இருக்கின்றன. இவை இல்லாமல் திவ்ய தீர்த்தங்கள், சாமானிய ஜனங்களுக்கு, அதிருஷ்யமாக, கண்ணில் படாத வகையில் எத்தனையோ இருக்கின்றன

இவை சித்தர்களுக்கும், தேவதைகளுக்கும் மட்டும் காணப்படுகிறது. அவர்கள் அதில் நீராடி , சுவாமியை தரிசித்து,புண்ணியத்தை பெறுவார் என்றும், புராணங்களில் சொல்லப்பட்ட மிகவும் அதிசயமான உண்மைகளில் ஒன்று.

சுவாமியை தரிசித்தபிறகு, இந்த தீர்த்தங்களை தரிசிக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன

சில தீர்த்தங்கள் ஆகாசகங்கா, ஜாபாலி பாபவிநாசனம், கோகர்ப தீர்த்தம் இவையெல்லாம் சாலையின் வழியாக வாகனங்களில் சென்று தரிசிக்கலாம்

மீதி தீர்த்தங்கள் தும்புரு தீர்த்தம், குமாரதாரா, ராமகிருஷ்ண தீர்த்தம் இவைகளை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக செல்லவேண்டும்.

ஆனால், மிகவும் அழகான,இயற்கையின் சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. மிகவும் பவித்ரமானவை

நம்முடைய பாவங்களை தீர்த்து புண்ணியங்களை அளிக்கக்கூடிய சக்திவாய்ந்த நீர்நிலைகள் இவைகளை பக்தர்கள் அவசியம் தரிசித்து, சுவாமியின் அருளை பெறுவதற்குநிறைய வாய்ப்புகள் இருக்கின்றன"  இவ்வாறு டாக்டர் ரமண தீட்சிதர் தீர்த்தங்களைப்பற்றின நாம் கேட்டிராத பல தகவல்களை சொல்லியிருக்கிறார். 

இதோ இந்தப்பதிவின்  வீடியோஇணைப்பு



ஓம் நமோ வேங்கடேசாய..!

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!

(தந்தி டிவியில் சனி,ஞாயிறுதோறும் காலை 7.10 மணிக்கு (சுமார்) ஒளிபரப்பாகும் திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் தொடரிலிருந்து, ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பான தகவல்கள் இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது. இன்று நாம் பார்க்கவிருப்பது வைகுண்ட ஏகாதசி (ஜனவரி11)அன்று ஒளிபரப்பான பகுதியிலிருந்து  ) 

திருமலை திருப்பதி கருவறை மூலவர் சிலை..!

வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..

கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..

ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..”  இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,

கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..

சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..

இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சிலநொடிகள்கூட நம்மள  சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..

இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..

அம்மா மஹாலட்சுமி, ஐயா கவிஞர் பெருமாள் ராசு

(சமீபத்துல கூட ஐயா கவிஞர் பெருமாள் ராசுவும் அம்மா மஹாலட்சுமியும் திருப்பதி தரிசனத்துக்கு போயிருந்தப்ப, பொறுமையா அவங்கள எந்த இடையூறும் செய்யாம சாமிய தரிசனம் செய்ய அனுமதிச்சிருக்காங்க..

அதுமட்டுமில்லீங்க..ஐயா கவிஞர் பெருமாள் ராசு சாமிய பாத்துட்டு திரும்பும்போது,

அவர கூப்பிட்டு, “நாராயணா…, இத வாங்கிட்டுப்போங்க நாராயணா….”ன்னு  சொல்லி,

சாமி பாதத்துல இருந்த துளசிதளங்களையும், முந்திரி, பாதாம் போன்ற பிரசாதங்களை கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பியிருக்காங்க.)

இனி..,

கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

அரூப தேவதைகள் சுவாமியை தரிசிக்கும் திருப்பதி கர்ப்பாலயம்

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”

ஆச்சரியமா இருக்குல்ல..அடுத்ததா, ஜனவரி 11 அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி..இதுபத்தியும் சில புதிய தகவல்கள சொல்லியிருக்காரு..டாக்டர் ரமண தீட்சிதர்

“..திருமலை திருப்பதியில் இன்று (ஜனவரி 11) வைகுண்ட ஏகாதசியை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர்  கொண்டுவரப்பட்டு  பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி,  துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் ,

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

பரமபதநாதர்(வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா


ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று மற்றொரு விசேஷம்,

ரதரங்கடோலோத்வம்

ரதரங்கடோலோத்சவம். புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து  மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்.."

இனி ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும் சாமிகிட்ட என்ன வேண்டறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லீங்க...உந்தன் திருக்கமல பாதங்களே சரணம்னு மட்டும் நாம நமஸ்காரம் செஞ்சிட்டா போதும்..மீதி எல்லாம் பெருமாள் பாத்துக்குவாருன்னு முடிவு செஞ்சிருக்கேன்.

அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால மார்க் செய்யப்பட்டிருக்கும்.

இது எதுக்காகன்னு ஒருமுறை கவிஞர் ஐயா பெருமாள் ராசு அவங்ககிட்ட கேட்டிருந்தேன்.

"..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."

அப்படின்னு ஐயா கவிஞர் பெருமாள் ராசு அவங்க சொல்லியிருந்தாங்க..

இது உங்க எல்லாருக்கும் பயன்படட்டும்னுதான் இங்க எழுதியிருக்கேன். அதுமட்டுமில்லாம..இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,

அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்குன்னு ரமண தீட்சிதரே சொல்லியிருக்காரு.

சாமானிய ஜனங்களுக்கும் சின்ன,சின்ன இந்த நுட்பமான ஆன்மீக தகவல்கள் போய் சேரணும், அதன்மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் அப்படிங்கறதுதான்  பெருமாளோட விருப்பம்..இதையெல்லாம் உங்களோட பகிர்ந்துகொள்ள கிடைச்ச இந்த வாய்ப்பு.. எனக்கு ரொம்பவே பெருமிதம்..!

இதோ..இந்தப்பதிவுல நாம விவரிச்சிருக்குற வீடியோ பதிவு

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -04 (நன்றி ; தந்தி டிவி )

ஓம் நமோ வேங்கடேசாய..!