உலகம் ஓர் அற்புதம்…அந்த அற்புதம் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ முறைகளில்
வெளிப்படும் விதங்கள்கூட அதிசயங்களே…
அந்த அதிசயங்கள் பலநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஞானியாக, ஒரு
சித்தபுருஷனாக பூவுலகில் அவதரிக்கின்றன.
ராமனோ, கண்ணனோ, ஏசுவோ, நபிகளோ…அப்படி அவதரித்தவர்களே.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் அப்படி அவதரித்தவர்களே ஆவர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
மாக்ஸ்முல்லர் என்ற மகான், “உலகில் மனிதனாகப் பிறப்பதோடு பாரதத்திலும்
பிறக்க வேண்டும். ஆன்மிக உலகில் பாரதத்திற்கு அப்படி ஒரு சிறப்பு உண்டு” என்று கூறினார்.
இந்த மண்ணில் எத்தனையோ சித்த புருஷர்கள்.
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும்
இங்குதான்- ராமகிருஷ்ண தேவர் கருணையால்!
அந்த விவேகானந்த சித்த புருஷனை உலக அரங்கினுக்கு அனுப்பிவைத்த பெருமையும்,
அந்த ஞானவள்ளல் நாடு திரும்பியதும் அரசரே முன்னின்று அடியார்கள் புடைசூழ வரவேற்ற பெருமையும்
இந்த மண்ணுக்கு உண்டு!
திக்குதிசை தெரியாத அமெரிக்க நாட்டில் அவருக்கு இந்த நாட்டின் சமயம் சார்ந்த
மடம் ஒன்றை சான்று கேட்ட சமயம், “அந்த நாய் அங்கேயே பனியில் விரைத்துச் சாகட்டும்”
(Let the dog freeze and die) என்று பதில் அளித்த தாம். ( இதனை எடுத்துக்
கூறியவர் லூயி ஃபிஷர்)
அச்சமயம் அவரை அடையாளம் கண்டுகொண்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர்
ரைட் விவேகானந்தரைப் பார்த்து, “ஐயனே உங்களைப் பார்த்து சான்றிதழ் கேட்பது சூரியனைப்
பார்த்து ஒளி வீச உனக்கென்ன தகுது இருக்கிறது என்று கேட்பது போல இருக்கிறது” என்றாராம்!
“To ask you, Swami, for credentials is like asking the sun to
state its right to shine”
என்று கூறுவிட்டு, அந்த சர்வ சமய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரோசுக்கு
தானே இவ்வாறு கடிதமும் எழுதினாராம்:
“நம்முடைய மிகவும் படித்த எல்லா பேராசிரியர்களையும் ஒன்றாகக்கூட்டினாலும்,
அவர்களைவிட, மெத்தப் படித்த மனிதர் இவர்…” என எழுதினாராம். அங்கு அவரது வாக்கெல்லாம்
ராமகிருஷ்ணரது வாக்காகவே இருந்தது.
அவரை சித்தபுருஷனென ஏன் கூறுகிறோம்?
ஒரு அமெரிக்க அன்பர் விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்ட
சமயம், “உனக்கென குருநாதன் பிற்காலத்தில் வரப் போகிறார்” என்று கூறினாராம்.
அவரை எப்படி அடையாளம் காண்பது எனக் கேட்டபோது, “அவர் உனக்கு ஒரு வெள்ளிப்
பேழையை பரிசளிப்பார்” என்று கூறினாராம்.
அவர் கூறியதைப் போலவே பல
ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமெரிக்க அன்பருக்கு பரமஹம்ஸ யோகானந்தர் வெள்ளிப் பேழையைப்
பரிசாக அளித்தாராம்!
அந்த அமெரிக்க அன்பர் விவேகானந்தரின் தீர்க்க தரிசனத்தை வியந்தாராம்!
“கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், பசியாலும், அறியாமையாலும் வாடும்வரை
யாருடைய வாழ்வையும் அழித்து தாம் கல்வி கற்றார்களோ அவர்களை கொஞ்சமும் நினைக்காத அவர்களை
துரோகிகள் என குற்றம் சாட்டுகிறேன்” என விவேகானந்தர் குமுறினார்.
ஒருமுறை விவேகானந்தர் ஐரோப்பா சென்றபொழுது, ஜெர்மனியில் வேதங்களை ஐம்பது
ஆண்டுகள் முயன்று மொழிபெயர்த்து புத்தகங்களாக்கிய மாக்ஸ்முல்லரையும், உபநிடதங்களையும்
கீதையையும் மொழிபெயர்த்த டஸ்கன் என்பவரையும் சந்தித்திருக்கிறார்.
(இந்த டஸ்கனின் மொழிபெயர்ப்பிலே திளைத்த ஸ்கோபன்ஹேவர் என்பவர் அவரது நூல்களை
தலையில் வைத்து தெருவெல்லாம் கூத்தாடினாராம்).
விவேகானந்தர் தம் கடைசி நாட்களில் இவ்வாறு கூறினார்:
“…இந்த உடம்பை பழைய, கிழிந்த சட்டையைப் போல களைந்து எறிந்தாலும், இந்த
உலகம் இறைவனோடு ஒன்றி இருப்பதை உணரும் வரை ஒவ்வொரு மனிதனையும் உள்நின்று ஊக்கிக் கொண்டே
இருப்பேன்…”
விவேகானந்த சித்த புருஷர் நம் மக்கள் மத்தியில் 150 ஆண்டுகள் முன் வாழ்ந்து
மறைந்தாலும் இன்றும் நம் மனதில் வாழ்கிறார்.
கட்டுரையாளர் அறிமுகம்: ஸ்ரீ இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள்
பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில்
இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர், திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின்
அணுக்கத் தொண்டராக இருந்தவர், ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய "மாத்தி
யோசி" தொடர் பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார்.
நன்றி : பாபாஜி சித்தர் ஆன்மீகம் - தீபாவளி மலர் - 2013
0 comments:
Post a Comment