Wednesday, January 30

பிரணவப் பிரவாகம்

கவிஞரே ஓவியராக-முகப்பு அட்டையில் திருமலை

ரசனை உள்ளவர்கள்தான் கவிஞர்களாக முடியும். நல்ல கவிஞர்கள் நல்ல ஓவியர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஓவியத் திறமை பெற்ற கவிஞர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் கவிஞர் பெருமாள் ராசுவுக்குத் தனியிடம் நிச்சயமாக உண்டு. 

  அவரது "பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பு ஓர் அற்புதமான படைப்பு என்பது மட்டுமல்ல, அரிய முயற்சியும் கூட.

 திருவேங்கடத்தில் தொடங்கி இந்தியாவிலுள்ள 150 திருத்தலங்களைச் சுற்றிவந்து 151-வதாகக் குமரிமுனை வரை உள்ள ஆலயங்களை அவர் தரிசித்தது மட்டுமன்றி, தனது தூரிகையில் தீட்டி மகிழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் ஓர் அற்புதமான கவிதையும் எழுதி, பாண்டுரங்க தேவனுக்குப் பாமாலை சார்த்தி மகிழ்ந்திருக்கிறார்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் கோயிலும் சரி, கேதார்நாத் ஜோதிர்லிங்கங்களும் சரி, கவிஞர் பெருமாள் ராசுவின் தூரிகையில் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள், ஜோதிர்லிங்கம் என்று கவிஞரின் காலடி தீர்த்தாடனக் காவடி எடுத்திருக்கிறது. அவரது ஓவியத்தில் மயங்குவதா, கவிதைகளின் பக்தி ரசத்தில் மூழ்கித் திளைப்பதா என்று தெரியாமல் தத்தளிக்க வைத்திருக்கிறார் கவிஞர் பெருமாள் ராசு.

"  இந்தப் பிரணவப் பிரவாகத்தில் காணும் புனிதக் கோயில்களும் பிற ஓவியங்களும் அப்பொழுதுக்கப்பொழுது வரைந்த அரிய அனுபவங்களே. நமது புனித மண்ணில் உள்ள ஆயிரமாயிரம் கோயில்களில் இதில் காண்பவை சிலவே. மேலும் உள்ளவற்றை தரிசிக்க இவை தூண்டலாம். இதில் காணும் எண்ணத் துகள்களும் அவற்றில் உள்ள 151 திருநாமங்களும் புதியன அல்ல. ஆனால் புதிய பரிமாணங்களில் உலகைக் காண உதவும்." கவிஞர் பெருமாள் ராசுவின் மனது பேசியிருக்கிறது. அடடா!

  "இக்கவிதைகள் இறைவனை உணர உதவும் முகவரிகளே... இந்த முகவரிகளே இறைவன் அல்ல...' என்று அவர் கூறியிருப்பதை ஆமோதிப்பன அவர் கவித்துவமும் ஓவியத்திறமையும்.

 பிரணவப் பிரவாகத்தில் முதல் கவிதை திருமலை திருப்பதியில் தொடங்குகிறது.

""உலகாகி உலகத்தின் உயிராகி உணர்வாகி
  உயர்வாகி நின்ற உயர்வே
பலவான பொருளாகிப் பகலாகி இரவாகி
  பண்பாகி நின்ற பண்பே
குலவுநல் குணமாகி அருளாகி அறிவாகி
  குருவாகி நின்ற குருவே
நலமான உன்பாதக் கமலத்தில் எமைஏற்று
    அருள்பாண்டு ரங்க தேவா'' 




பின் அட்டையில்-கவிஞரே ஓவியமாக



 (தன்னைத்தானே வரைந்தது)

-நன்றி; பிரணவப் பிரவாகம்- திணமணியில் வெளியான நூல் விமர்சனம்

0 comments: