Sunday, September 9

கோவிந்தனிடம் என்ன வரம் கேட்கலாம்..! ஒரு பெரியவர் சொல்லிக்கொடுக்கும் ரகசியம்..!!



ஸ்ரீராமஜெயம்
வயதான தொண்டுகிழம்..எந்த நேரமும் உயிர் இந்த உடலை விட்டுப்பிரியலாம். தன்னலமில்லாத மனிதர். அதனால்தானோ என்னவோ, இந்த பிரபஞ்சமே அவருக்கு தனது ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்திவிட்டது. இயற்கையின் அதீதமான உண்மைகளை புரிந்துகொண்ட ஒரு மனிதன், தனக்குள்ளேயே அடங்கிவிடுவான். 

கடல் அலையின் ஆர்ப்பரிப்புகள் அடங்கினதைப்போல, அவருடய மனம் எப்போதும் ஒரு லயத்துக்குள்ளேயே இருந்துவந்தது. பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த அந்த முதியவருக்கு நினைத்த நேரத்தில் அந்த பிரபஞ்ச நாயகனும் வந்து தரிசனம் கொடுப்பார்.

ஒரு குறிப்பிட்ட நிலையை கடந்துவிட்டால், தேவைகளுக்காக அந்த பிரம்மாண்ட நாயகனை நினைப்பது அற்றுப்போய்விடும். நமக்கான ஒரு சுகமான நட்பைப்போல நம் எல்லோருடனும் அந்த பிரபஞ்சநாயகன் வந்து உறவாடிவிட்டுப்போவார்.

அப்படித்தான் தனிமையில் ஏகாந்தத்துடன் இருந்த பெரியவருக்கு முன்னால் வந்து நின்றார் பிரபஞ்ச நாயகன். ஒருவரையொருவர் காதலுடன் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொண்டனர். எல்லா சுவைகளுக்கும் நாதன் அவன். அப்படி ஒரு தலைவனின் வருகை அந்த இடத்தையே கூடுதலாக மணக்கச்செய்யுமே. அப்படித்தான் இருந்தது அந்த இடமும்.

காரணமில்லாமல், இருவரும் சிரித்துக்கொண்டனர். பேசிக்கொள்ள ஏதுமில்லை. எதிர் எதிரே அமர்ந்து சிறிதுநேரம் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். தனது உயிருக்கு அந்த பிரபஞ்சநாயகனை உணவாக்கிக்கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

குறுகுறுவென பார்த்துக்கொண்டே இருந்தால், நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். 

திடீரென சுதாரித்துக்கொண்ட பிரபஞ்சநாயகன், 
'...சிறிதுநேரம் நாம் விளையாடலாமா..? என்று கேட்டார். 

ஆதவனின் ஆசைக்கு அணைபோட முடியுமா. உடனே சம்மதித்தார் பெரியவர். இருவரும் பகடை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். 

திருமலை திருப்பதி மெயின் கோபுரத்திற்கு எதிர்புறம், ஹாதிராம் பாவாஜி பெருமானுடன் விளையாடிய காட்சி உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 

விளையாட்டின் ஊடே லேசான உரையாடல். அவற்றிற்கு மென்மையாய் பதிலளித்துக்கொண்டே இருந்தார் பெரியவர்.

‘…கேட்டதைக்கொடுக்கும் பிரபஞ்சநாயகன் உங்கள் முன்னே இருக்கிறேன். என்னிடம் கேட்பதற்கு உங்களுக்கு ஒன்றுமே இல்லையா..’

ஏதோ ஒன்றை யாசிப்பதைப்போல் இருந்தது நாயகனின் கேள்வி. உலகமே என்னிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கிறது. உனக்கு மட்டும் என்னிடம் இருந்து கேட்க ஒன்றுமே இல்லையா என்கிற கவலை அதில் இருந்தது.

‘…பரந்தாமா…இந்த வயதான காலத்தில் எனக்கு என்ன வேண்டியிருக்கிறது. நினைத்தபோதெல்லாம் நீயே வந்துவிடுகிறாய், அதைவிட உயர்வானது வேற என்ன …?

இந்த ஒரே கேள்வி நாயகனை மடக்கிப்போட்டுவிட்டது.

விடுவான அந்த மதுசூதனன். ஆசைகளால் தூண்டில் போட ஆரம்பித்தான்.

‘..உங்களுக்கு இந்த உலகிலேயே உயர்ந்த செல்வம் வேண்டுமா..கேளுங்கள் தருகிறேன்..’

‘..பாண்டுரங்கா..உனது பலவிதமான பெயர்களை எனது நாவால் உச்சரிப்பதைவிட உயர்வான ஒரு செல்வத்தை உம்மால் கொடுக்கமுடியாது. அது என்னிடம் நிறைய இருக்கிறது.’

‘..அப்படியானால்..உங்களுக்கு ஆட்சி அதிகாரம் ஏதாவது..’

‘..இந்த உடலையே இன்னும் இந்த உயிர் எத்தனை நாளைக்கு ஆளும் என்பது எனக்குத்தெரியாது. அப்படியிருக்க..இந்த உயிர் தங்கியிருக்கும் உடலுக்கு ஒரு ஆட்சி அதிகாரம் கிடைத்து என்ன செய்யப்போகிறேன்..’

‘…உங்களின் அன்புக்கு நான் எதையாவது தரவேண்டும் என்று துடிக்கிறேன். எனது தவிப்பு உங்களுக்கு புரியவில்லையா…’ என ஏக்கத்துடன் கேட்டான் பிரபஞ்சநாயகன்.

‘…செல்வமோ, ஆட்சி அதிகாரமோ எனக்கு வேண்டாம் நாயகனே..’

‘..சொல்லுங்கள்…அப்படியானால் நான் உங்களுக்கு என்னதான் தருவது..’

‘..எனக்கு ஒன்றே ஒன்றுதான்..’

எதுவுமே வேண்டாம் என்ற பெரியவருக்கு தனக்கு ஒரே ஆசை என்றதுமே கோபாலனுக்கு பேரானந்தம். இவரும் ஆசையில் சிக்கிவிட்டார். என்ன கேட்கப்போகிறார் எனப் பார்ப்போம் என ஆவலுடன் அவர் பேசப்போவதை எதிர்பார்த்து காத்திருந்தார்.  

தயங்கித்தயங்கி தனது எண்ணத்தை வெளிப்படுத்த தொடங்கினார் பெரியவர்.

‘…கோவிந்தா…எனது உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி எனது நினைவு இல்லாமல் போய் விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் எனக்கு முழுவதுமான நினைவு தப்பிப்போகலாம். அப்படி ஒருவேளை உன்னை நான் மறக்கும் நிலை வந்து நான் உன்னை நினைக்க மறந்துபோகலாம்..,

…நான் நினைத்த நேரத்தில் எல்லாம் வந்து என்னைப் பார்த்துவிட்டுபோன நீ,  என் நினைவு தப்பி உன்னை நான் முற்றிலுமாக   மறந்துவிட்ட அந்த சமயத்திலும் நீ தான் என்னை மறக்காமல் நினைவால் பற்றி  இருக்கவேண்டும். என் நினைவு எனும் உறுப்பு செயலிழந்துபோனாலும், உனது நினைவிலாவது எப்போதும் நான் இருக்கவேண்டும்... பரந்தாமா..'

வேண்டுதலில் விக்கித்துப்போனது பெரியவர் மட்டுமல்ல…அந்த கோபாலனும்தான். அப்படியே ஆகட்டும் என மனமுருகி வரமளித்தார்  ரங்கன். 
ஹாதிரம் பாபாஜி மடம், திருமலை


அதுதான் இன்றுவரையிலும் அந்த பெரியவரின் புகழை கோவிந்தன் நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறார். இப்படி ஒரு வித்யாசமான வரம் கேட்ட  அந்த பெரியவர் ஹாதிராம் பாபாஜி. அவர்தான், திருமலை தேவஸ்தானம் உருவாவதற்கு முன் திருமலையின் பொறுப்புக்களை கவனித்து வந்த ஒரு மகான்.

ஹாதிராம் பாபாஜி மடம், திருமலை

திருமலை திருப்பதியில் அவரது ஆசிரமம் இருந்த இடத்தில் இன்றும் வழிபாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

ஹாதிராம் பாபாஜி

தேவைகள் தீரவே நாம் திருப்பதிக்கு சென்று வருகிறோம். ஆனால், அந்த கோவிந்தனின் நாமத்தை சொல்லுவதே ஒரு மிகப்பெரிய செல்வம் என்றும், அவரை நினைத்துக்கொண்டிருப்பதே மிகப்பெரிய அதிகாரம் என்றும் நம்பிய அந்த மகானுக்கு கோவிந்தன் திருமலையில் தனது சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய இடம் கொடுத்திருக்கிறார். இனியாவது கோவிந்தனுக்கு நன்றி சொல்லிப் பழகுவோம். 

கோவிந்தா..!

இனி கோவிந்தனிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என பாடிக் குதூகலிப்போம்.
  

3 comments:

நன்மனம் said...

when ever i go to Tirumala, i used to wonder the story of this picture. Today with HIS divine blessings, was able to get clarified. Thanks. Sridhar

Unknown said...

Thanks

Unknown said...

Unmaithaan ....naaa appadi nenaithathu undu ...naa kasdapadurappa avara nenaithal En kasdam theerum...