Sunday, February 9

திருமலையில்தான் எத்தனை எத்தனை தீர்த்தங்கள்..?

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 05 

(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி யன்று தந்தி டிவியில் ஒளிபரப்பானது)

டாக்டர் ரமண தீட்சிதர் சொல்கிறார் 

"..இன்று வைகுண்ட துவாதசி.

புண்ணியதினமான வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் என்றும், இன்று கூட(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி) வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படுகிறது

இன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.

திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம்இன்று கர்ப்பாலயத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்கு சக்கரஸ்நானம் என்று பெயர்.

திருமலை திருப்பதி சுவாமி புஷ்கரணி

இந்த சுவாமி புஷ்கரணி என்பது இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும்,

வைகுண்ட துவாதசி அன்று பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை புண்ணிய ந்திகளில் இருந்தும் புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும் சக்தி வந்து இந்த சுவாமி புஷ்கரணியில் கலக்கும் என்றும்

இதற்கு சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி என்று பெயரிட்டு அன்று சக்கரஸ்நானம் நடைபெறுகிறது

இந்த சக்கரஸ்நானத்தின்போது ,சுவாமி புஷ்கரணியில் குளிக்கும் பக்தர்களுக்கு,எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், சாமியின் அருள் கிட்டும் என்பதும்  சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை.  

சுவாமி புஷ்கரணி என்பது,மிகவும் பவித்ரமானது.பார்க்கும்பொழுதே, அல்லது அந்த தீர்த்தத்தை புரோட்சனை செய்துகொள்ளும்போதே பாவங்களை அழிக்கக்கூடிய புண்ணிய தீர்த்தம் என்று சொல்லப்பட்டது.

தர்சன,பர்சன,மாத்ரேன என்று சொல்லப்பட்ட புனிதமான புஷ்கரணியில் இன்று சக்கரஸ்தானம்(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி) நடைபெறுகிறது

பக்தர்கள் சக்கரஸ்நானத்தின் பொழுது ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி,சுவாமியின் அருளால் பாவங்களை நீக்கி புண்ணியங்களைப்பெறுவதற்கு இது மிகவும் விசேஷமான ஒரு வாய்ப்பு.

திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத்தொடரில் மிகவும் புனிதமான ஆறுகோடி தீர்த்தங்கள் இருப்பதாக,சொல்லப்பட்டிருக்கிறது


இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சிலது, மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கறது.

இதில் முக்கியமானது, ஆகாசகங்கா, பாபவிநாசனம், ஜாபாலி தீர்த்தம், கோகர்ப தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம், சனகசனந்தன தீர்த்தம், சக்கர தீர்த்தம்,முதலியவை

இந்த  தீர்த்தங்களை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக சென்று பார்க்கலாம்.

ஆகாசகங்கா தீர்த்தத்திலிருந்துதான்,திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தீர்த்தம் தினமும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அப்பால், பாபவிநாசன தீர்த்தம் இருக்கிறது.

கோகர்ப தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் என்று கூட அழைக்கப்படுகிறது.

குமாரதார தீர்த்தம் என்ற புனித தீர்த்ததில் சுப்ரமணிய சுவாமி முருகன்,நிரந்தரம் தவத்தில் இருப்பார் என்றும்,தினமும் கர்ப்பாலயத்தில் வந்து சுவாமியை தரிசிப்பார் என்றும், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதே விதமாக தும்புரு தீர்த்தத்தில், நாரதர், தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும்,

தும்புரு தீர்த்த த்தில் இருக்கும் தும்புரு தேவரிஷியின் சிலை
தும்புரு தீர்த்தம்

இந்திந்த தீரத்தங்களில் ஒரு ஒரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி, சுவாமியை தரிசித்து செல்வார்கள் என்றும் அவர்களுடைய பாத சுவடுகள்கூட சிலர் பார்த்திருப்பதாக பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்

அப்படிப்பட்ட புனிதமான தீர்த்தங்கள் மலையில் எத்தனையோ இருக்கின்றன. இவை இல்லாமல் திவ்ய தீர்த்தங்கள், சாமானிய ஜனங்களுக்கு, அதிருஷ்யமாக, கண்ணில் படாத வகையில் எத்தனையோ இருக்கின்றன

இவை சித்தர்களுக்கும், தேவதைகளுக்கும் மட்டும் காணப்படுகிறது. அவர்கள் அதில் நீராடி , சுவாமியை தரிசித்து,புண்ணியத்தை பெறுவார் என்றும், புராணங்களில் சொல்லப்பட்ட மிகவும் அதிசயமான உண்மைகளில் ஒன்று.

சுவாமியை தரிசித்தபிறகு, இந்த தீர்த்தங்களை தரிசிக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன

சில தீர்த்தங்கள் ஆகாசகங்கா, ஜாபாலி பாபவிநாசனம், கோகர்ப தீர்த்தம் இவையெல்லாம் சாலையின் வழியாக வாகனங்களில் சென்று தரிசிக்கலாம்

மீதி தீர்த்தங்கள் தும்புரு தீர்த்தம், குமாரதாரா, ராமகிருஷ்ண தீர்த்தம் இவைகளை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக செல்லவேண்டும்.

ஆனால், மிகவும் அழகான,இயற்கையின் சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தங்கள் மிகவும் புனிதமானவை. மிகவும் பவித்ரமானவை

நம்முடைய பாவங்களை தீர்த்து புண்ணியங்களை அளிக்கக்கூடிய சக்திவாய்ந்த நீர்நிலைகள் இவைகளை பக்தர்கள் அவசியம் தரிசித்து, சுவாமியின் அருளை பெறுவதற்குநிறைய வாய்ப்புகள் இருக்கின்றன"  இவ்வாறு டாக்டர் ரமண தீட்சிதர் தீர்த்தங்களைப்பற்றின நாம் கேட்டிராத பல தகவல்களை சொல்லியிருக்கிறார். 

இதோ இந்தப்பதிவின்  வீடியோஇணைப்பு



ஓம் நமோ வேங்கடேசாய..!

1 comments:

Anonymous said...

திருமலையில் இருக்கும் தெய்வம் விஷ்ணுவா இல்லை முருகனா ?

'அதிவோ அல்அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்று அன்னமையா பாடலுக்கு ஏற்ப திருமலை விஷ்ணு கோவில் தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திருமலை தெய்வம் முருகனாக இருக்கலாம் என்று கூறுவோர் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் இதோ:
1. ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற கூற்று போலவே தமிழில் இன்னொன்றும் இருக்கிறது. ‘மலை இருக்கும் இடமெல்லாம் மால் இருக்கும் இடம்’. குன்று என்பது சிறியது. நடந்தே கடக்கக்கூடியது. குன்றின் மேல் குகை இருக்கும். இது பழந்தமிழர் வாழ்ந்த இடம். ஆனால் மலை என்பது பெரியது. திருமலை குன்றல்ல. மலைத்தொடர்.
2. திருமலை கோவிலில் வைணவ சிற்பங்கள் இல்லை: வைணவ திரு தலங்கள் இரண்டு ஆகம விதிப்படி அமைக்கபெறுகின்றன. அவை வைகாநஸம் மற்றும் பான்சராத்ரம். திருமலை வைகாநஸ விதிப்படி கட்டப்பட்டது. இந்த விதிப்படி பிரதான தெய்வம் தவிர மற்ற தெய்வங்கள் பெரிதாக பூஜிக்கப்படுவதில்லை
3. பாலாஜி என்ற பெயர் 'பாலன்' என்ற பெயரில் இருந்து வந்தது. பாலன், குமரன் எல்லாம் முருகனை குறிக்கும்: பாலாஜி என்பதற்கு பெயர் காரணம் வேறு. அதில் இருக்கும் ‘BALA’ தமிழ் அல்ல, வடமொழி. வட இந்தியாவில் சிவனை போலேநாத்(கூப்பிட்டாலே போதும் அருள் புரிபவர்) என்றும் விஷ்ணுவை பலநாத்(சக்தியின் முழு வடிவமானவர்) என்றும் அழைப்பார்கள். BalaNAATH & BalaJI, மருவி பாலாஜி ஆகிவிட்டது.
4. மற்ற வைணவ கோவில்களில் இருப்பது போல் நான்கு கைகள் இல்லை: எழுமலையான், விஷ்ணுவின் அவதாரம் இல்லை(not an incarnation). ராமன் (திரேத்தா யுகம்), கண்ணன்(துவாபர யுகம்) போன்று மனித உருவில் வந்த கலியுக தெய்வம்(manifestation). ஆதலால் மனித உருவத்திலேயே காட்சி தருகிறான்.
5. மூலவர் சிலையில் ருத்திராக்ஷமும் கையில் வேலும் உள்ளது. அதை மறைக்கவே நாமம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன: நிச்சயம் இல்லை. இப்பொழுது கூட்டம் மிகுதியால், திருமலைக்கு வரும் அனைவரும் இறைவனை தரிசனம் செய்ய வேண்டி அபிஷேகம் விரைவாக நடக்கிறது. 40 வருடங்களுக்கு முன் அபிஷேகம் நடந்த போது இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டிய நிலையில் நான் தரிசித்து இருக்கிறேன். அப்படி எதும் இல்லை என்று என்னால் அடித்து கூறமுடியும்.
6. வைணவ கோவில்களில் மொட்டை போடும் பழக்கம் இல்லை, இது ஜைன / புத்த மத பழக்கம்: முடி காணிக்கை என்பது திருமலைக்கு மட்டுமே உரித்தான ஒன்று. பிற்பாடு தான் மற்ற கோவில்களிலும் உண்டானது. அரசன் ஒருவன் தனது இருமுடியை மழித்து காணிக்கை ஆக்கி இறைவனிடம் சரண் அடைந்த நாள் முதல் இது தொடர்வதாக கேள்வி.