Friday, July 12

இதோ..நேரில் வந்த மகான்..!


கவிஞர் பெருமாள் ராசு அய்யா அவர்கள் 
 பகவான் யோகிராம்சுரத்குமாருடனான தனது அனுபவங்களை பல இடங்களில் தொடர்ந்து பதிவு  செய்து வருகிறார். அவருடன் இருக்கும் சமயங்களில் பலவிதமான சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். அப்படி அய்யா அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வை அவருடைய வரிகளின் மூலமாகவே இங்கு பகிர்ந்துகொள்வது பலருக்கும் பலனளிக்கும் என்பதால் அய்யாவின் பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட இதோ ஒரு இதிகாசம் எனும் நூலில் இருந்து ஒரு சம்பவம் இங்கே உங்கள் பார்வைக்கு..!

                                                 ஓவியத்தில் சிரித்தார்..!

கவிஞர் சொல்கிறார்," ஒருநாள்  இரவு எம்பெருமானின் நினைவு மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தது. அவரது படத்தை வரைய ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் கை தானாக, நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் முடியவில்லை.

இரவு12.00 மணி இருக்கும். யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். கோவிந்தசாமி என்ற அன்பர் நின்றிருந்தார். "என்னாங்க இந்த நேரத்தில்?" என்றேன். சுவாமிஜி அனுப்பியதாக சொன்னதும் மனம் தூக்கி வாரிப்போட்டது.

சுவாமிஜி ஒரு ஆப்பிள் பழத்தை எனக்குக் கொடுக்கச் சொல்லி அனுப்பியிருந்தார். இந்த நேரத்தில் என்ன அவசரம், காலையில் கொண்டு வந்திருக்கலாமே என்றேன். அதற்கு அவர், சுவாமிஜி நேராக இங்கு வந்து பழத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகச்சொன்னார் என்றார்!

பெருமானின் அருளாக அவர் அனுப்பிய பழம் வந்து சேர்ந்தது. படம் வரைய ஆரம்பித்தேன். மளமளவென வளர்ந்து நிறைவுபெற்றது.

பிறகு ஒருநாள் திருவண்ணாமலை சென்றபோது அப்படத்தையும் கொண்டு சென்றேன். அனைவரும் பாராட்டினார்கள். அப்போழுது பெரியவர், டாக்டர் சங்கர்ராஜூலு, முதல் பலரும் இருந்தனர்.

சுவாமிஜியும் அதனை ரசித்தார்கள். நான் சுவாமிஜியிடம் உங்கள் சிரிப்பின் அழகை அதில் கொண்டு வரமுடியவில்லை என்றேன். 

உடனே சுவாமிஜி "why should Perumal say so.." எனக்கூறி படத்தை வாங்கிக்கொண்டு மேஜை மீது அதை வைத்து அதன்மீது தனது கையை கொஞ்ச நேரம் வைத்து விட்டு பிறகு என்னிடம் கொடுத்து "see Perumal whether there is any change in it?" என்றார்.

அதற்கு நான் "There may be changes, but I don't see Swamiji" என்றேன்.

பெருமான் அழகாக சிரித்துவிட்டு அப்படத்தை வாங்கி தன் கையை அதன்மீது வைத்து சிறிது நேரத்தில் தந்தார். 

அதில் ஒரு தெய்வீகப் புன்னகை மலர்ந்திருந்தது. 

அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

அந்தப் படத்தை பெருமான் மீண்டும் தந்தபோது அம்மா(மஹாலட்சுமி ) அந்தப் படத்தை தொழுகைக்காக வைக்க வேண்டும் எனக் கூறினார். 

பெருமான் உடனே அந்தப் படத்தை வாங்கிக்கொண்டு என்னை பேனா கொடுக்குமாறு கேட்டார்.

நானும் கொடுத்தேன். படத்தின் நான்கு மூலைகளிலும் வட்டவட்டமாக கிறுக்கிவிட்டுக்கொடுத்தார்.

அந்தப் பேனாவில் இங்க் இல்லாமல் இருந்தது பிறகுதான் நினைவு வந்தது. வெற்றுப்பேனா கூட மை இல்லாமலேயே அவர் கையில் கிறுக்கும்.

ஒருமுறை அன்பர் ராஜமாணிக்க நாடார் அந்தப் படத்தைப் பார்த்து " நீங்கள் அதனை மையினால் வரையவில்லை. இதயத்தால்  வரைந்திருக்கிறீர்கள்" என்றார். 

ஒருமுறை எம்பெருமான்  எதற்காகவோ 
"Wherever Perumal is there, this Begger is there" என்றார்.
 நானும் சுவாமிஜி ஏதோ எதேச்சையாக சொன்னதாக நினைத்தேன்.

நான் வரைந்த அந்தப்படம் எனது படுக்கைக்குக் பக்கத்திலேயே இருக்கிறது. சிலசமயம் அந்தப்படத்தைப் பார்த்து ஏதாவது அவருடன் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருப்பேன்.

ஒருநாள் இரவு சன்னதித்தெரு வீட்டில் அவருடன் நானும் படுத்திருந்தேன். பெருமான் மேலே பார்த்தவண்ணம் நான் அவரது படத்துடன் பேசியதை அப்படியே சொல்லியபின் "This Begger is there Perumal" என்று சொன்னார்.

அப்பெருமான் முன்பு சொன்ன வாக்கியத்தின் சத்தியம் புரிந்தது. 

அவர்முன் காலமும் தூரமும் காணாமல் போயின. 

கவிஞர் பெருமாள் ராசு -(நன்றி ; இதோ ஒரு இதிகாசம்)

பகவான் யோகி ராம்சுரத்குமாருடன் கவிஞர் பெருமாள்ராசுவும், அம்மா மஹாலட்சுமி அவர்களும் கொண்டிருந்த அன்பினை இந்த சம்பவத்தின் மூலம் நாம் உணரமுடியும். 

பகவானின் பக்தர்கள் இன்றும் யோகிராம் சுரத்குமாரை 
கவிஞர் அய்யா மற்றும் அம்மா மூலமாக உணர்வு பூர்வமாக அனுபவித்து மகிழ்கிறோம் என்பது சத்தியமான உண்மை.

கவிஞர் அய்யாவும், அம்மாவும் இருக்கும் இடத்தில் 
நிச்சயம் பகவான் யோகிராம் சுரத்குமார் இருக்கிறார்.
"Wherever Perumal is there, this Begger is there"
இது பகவான் யோகிராம் சுரத்குமாரின்  சத்தியவாக்கு.

அப்படிப்பட்ட பகவானுக்கு சேலத்தில் கோயில் எழுப்பி கும்பாபிஷேக விழா நடத்தி மகிழ்ந்துள்ளனர் சில அன்பர்கள். இந்த விழாவில் கவிஞர் பெருமாள் ராசு அய்யா அவர்களும், அம்மா மஹாலட்சுமி அவர்களும் கலந்துகொண்டது, பகவான் யோகிராம் சுரத்குமார் அவர்களே  நேரடியாக இந்த விழாவில் கலந்துகொண்டு தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார் என்பதாகத்தான் நான் உணர்கிறேன். விழாவில் கலந்துகொண்டவர்களும் இதை உணர்ந்திருப்பார்கள்.

அந்த அற்புதவிழாவின் படங்கள் இதோ..!
சேலம், பகவான் யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரா
 கும்பாபிஷேகவிழா படங்கள்


அழைப்பிதழ் - முதல் பக்கம்

அழைப்பிதழ் - இரண்டாம் பக்கம்

அழைப்பிதழ் - மூன்றாம் பக்கம்

அலங்கரிக்கப்பட்டிருக்கும் உள்மண்டபம்

அலங்கரிக்கப்பட்டிருக்கும் உள்மண்டபம்
அருளாசி பொழியும் பகவான் யோகிராம்சுரத்குமார்


கும்பாபிஷேக விழா காட்சிகள்


யாகசாலை

யாகசாலையில் வேள்வி

'அம்மா மஹாலட்சுமியும், அய்யா கவிஞர் பெருமாள்ராசுவும் (முன்வரிசையில்) '

பகவான் யோகிராம்சுரத்குமார்
என்றென்றும் நம்மை ஆசீர்வதிக்கும் ..பகவான், 
இதோ இப்போது இவர்கள் மூலமாக நமக்கு அருள்கிறார்.!

'அம்மா,அய்யாவுடன் விழாக்குழுவினர்'


கவிஞர் பெருமாள் ராசு அய்யாவும், அம்மா மஹாலட்சுமியும் 
அந்த பகவானின் உருவில் நம்மை ஆசீர்வதிக்கின்றனர்
குருவே சரணம்..!
யோகிராம் சுரத்குமாரா
யோகிராம் சுரத்குமாரா
யோகிராம் சுரத்குமாரா
ஜெயகுருராயா..!

0 comments: